புவிசார் குறியீடு கிடைத்தும் பலனில்லை விலையில் மணக்காத மதுரை மல்லி : விவசாயிகள் ஏமாற்றம்

மதுரை, ஜூலை 28: புவிசார் குறியீடு கிடைத்தும் மதுரை மல்லிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு சென்ட்  ஆலை, குளிரூட்டும் குடோன் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.  பூக்களில் மல்லிகையின் நறுமணம் தனி சிறப்புடையது. அதிலும் மதுரை மல்லிகைக்கு மவுசு அதிகம். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம்,  உசிலம்பட்டி தாலுகா பகுதிகளில் சுமார் 1,250 ஹெக்டேர் பரப்பில் மல்லிகை பூ உற்பத்தியாகிறது. மதுரை விவசாயிகள் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மல்லிகை பூச்செடிக்கு பதியம் பெற்று, நவம்பரில் நடவு செய்வார்கள். மார்ச் முதல் அக்டோபர் வரை  மகசூல் செய்வார்கள். ஏப்ரல், ஜூன், ஜூலையில் பூத்துக்குலுங்கும் என்பதால் விலை பயங்கரமாக வீழ்ச்சியாகும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. பனி சீசனில்  பூக்கள் உதிர்வதால் உற்பத்தி குறையும். ஆனால் விலை ஏற்றம் இருக்கும். இந்த சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மல்லிகை பூவுக்கு புவிசார் குறியீடு  கிடைத்தது.
Image result for JASMINE FLOWER IMAGES
இதன் மூலம் மதுரை மல்லிகை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே  மிஞ்சியது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “மதுரையில் மல்லிகை பூ சென்ட் ஆலை அமைக்கும் திட்டம், விலை வீழ்ச்சி அடைந்தால் வாடாமல் சேமித்து வைத்து,  விலை ஏறும்போது விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட குடோன்கள் அமைக்கும் திட்டம் என அரசின் அறிவிப்புகள் காற்றில் பறந்து விட்டன. மல்லிகையில்  நறுமண சோப்பு, ஆயில், ஷாம்பு தயாரிப்பு திட்டங்கள் நிறைவேறினால் மல்லிகை விவசாயிகள் வாழ்வில் மணம் வீசும்’’ என்றனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘மல்லிகைப்பூவை பொறுத்தவரை டல் சீசனில் கிலோ அதிகபட்சமாக ரூ4 ஆயிரம் வரை சென்றுள்ளது. தற்போது வரத்து  அதிகரித்தும், ஆடி மாதம் விசேஷங்கள் இல்லாததால் கிலோ ரூ500 – 600 வரை விற்கிறது. நிலையில்லாத விலையால் எங்களுக்கும் பெரிய லாபமில்லை’’  என்றனர்.’

மனசு வைக்குமா அரசு?
மல்லிகை பூ சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் செலவாகிறது. பூ பறிக்க கிலோவுக்கு ரூ40 முதல் 50 வரை கூலியாகிறது. ஜிஎஸ்டி,  பூக்களை தோட்டங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர போக்குவரத்து கட்டணம். இப்படி பல்வேறு வகையில் உச்சத்திற்கு சென்று விடுகிறது. ஆனால்  திருமண சீசன், கோயில் திருவிழா காலங்களில் மட்டும் கிலோ ரூ1,000 முதல் 3000 வரை விற்பனையாகிறது. சாதாரண நாட்களில் அடிமாட்டு விலைக்கு  செல்கிறது. இது வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையாகும். விவசாயிகளுக்கு இந்த விலை கூட கிடைக்காமல் விரக்தி அடைகின்றனர். எனவே விவசாயிகளுக்கு  விலை கிடைக்க நெல், கரும்புக்கு அரசு விலை நிர்ணயிப்பது போல் மல்லிகை பூவிற்கும் நிர்ணயித்து, கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.