பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை குழந்தைப் பருவத்திலேயே வந்துவிடும். சுக்கிரனால் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பலன்கள் தந்தையின் மூலம் கிடைக்கும். தந்தை, கலைத்துறையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்பும் பணமும் புகழும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் யோகமும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் குழந்தை பாக்கியம் பெற்ற பெற்றோர் கொடுத்துவைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெண்மையின் சாயலுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். நடைமுறையில் யதார்த்தமாக இருப்பீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பீர்கள். அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் கொண்டிருப்பீர்கள். இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பவர்களாக இருப்பீர்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்படுவீர்கள். அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பீர்கள். கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பீர்கள்.