பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலாவை அவருடைய உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். அதனால் இந்த தேர்தலை தள்ளிவைத்துவிட்டு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பண பலம் மற்றும் போலீஸ் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

ஆனால் தமிழக மக்கள் இந்த அரசை ஏற்க தயாராக இல்லை. அ.தி.மு.க. அரசு வீட்டுக்கு செல்வது உறுதி. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் துரோகம் செய்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை போன்றவர்கள். இந்த ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கர்நாடகத்தில் எந்த கட்சியின் ஆட்சி வந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தருவது இல்லை என்பது தான் கர்நாடகத்தின் நிலைப்பாடாக உள்ளது. கர்நாடக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை அரசியலாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கேட்டு நாங்கள் மனு தாக்கல் செய்தோம். ஆனால் 3-வதாக ஒரு நீதிபதியை நியமித்து அவர் இந்த வழக்கை சரியான முறையில் விசாரிப்பார் என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். அதனால் இந்த விசாரணையில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறையில் லஞ்சப்புகார் தொடர்பாக எனது ஆதரவாளர் புகழேந்திக்கு கர்நாடக ஊழல் தடுப்பு படை சம்மன் அனுப்பியது. எப்படியாவது சதி செய்து என்னை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவை நான் பார்த்தது கூட கிடையாது. எனக்கு சம்மன் வந்தால் நானும் ஆஜராக தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Leave a comment

Your email address will not be published.