பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை: நிதி மந்திரி அருண்ஜெட்லி திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.
புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது.
சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்.
நேர்மையாக வரி செலுத்துவோரின் கவலை வரிகளில் தங்களுடைய பங்கை செலுத்துவதுடன், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு தருவதுதான்.
எனவே, குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கடந்த 4 ஆண்டுகளில் வரியில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதில் பெட்ரோலிய பொருட்களின் வரி பங்களிப்பு மட்டும் 0.72 சதவீதம் ஆகும்.
எண்ணெய் அல்லாத வரிகள் மீதான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2017-18-ல் 9.8 சதவீதமாக இருந்தது. இது 2007-2008-ம் ஆண்டுக்கு இடையேயான கால கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மோடி அரசு நிதி விஷயத்தில் முன்ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்து இருக்கிறது. நிதியளவில் ஒழுக்கம் இல்லாமல் போனால் கடன்பெறுவதுதான் அதிகரிக்கும். எனவே நிதியளவை புத்திசாலித்தமான, வலுவான கையாளும் மத்திய அரசால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க இயலும்.
அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கச் செய்துவிடும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மறைமுகமாக விமர்சித்த அருண்ஜெட்லி, “இது பொறியில் சிக்கவைக்கும் யோசனை. எனக்கு முன்னோடியே(ப.சிதம்பரம்) இதைச் செய்ய முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published.