பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்: பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பேட்டி

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்: பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பேட்டி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தோற்றதற்கு பரிகாரமாக இந்த உலக கோப்பையை வெல்ல விரும்புவதாக பிரான்ஸ் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த முதலாவது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் பந்து பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் தான் (64 சதவீதம்) அதிகமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. 22-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டோபி ஆல்டர்வைரல்டு அடித்த அதிரடியான ஒரு ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் பாய்ந்து விழுந்து அருமையாக தடுத்து நிறுத்தினார். இதே போல் 39-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பவார்ட் அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் முறியடித்தார். முதல் பாதியில் இரு அணி தரப்பில் யாரும் கோல் போடவில்லை.
பிற்பாதியில், 51-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை பிரான்ஸ் வீரர் சாமுல் உம்டிடி தலையால் முட்டி அழகாக வலைக்குள் திருப்பினார். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாகவும் மாறியது. 81-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஆக்சல் விட்செல் இலக்கை நோக்கி அடித்த பந்தும், பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிசை தாண்டவில்லை.
பிரான்சின் வெற்றி உறுதியானதும், பாரீஸ் நகரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் ஆடிபாடி மகிழ்ந்தனர். ஒரு சில இடங்களில் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறவே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
பிரான்ஸ் அணி உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றை எட்டுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1998 (சாம்பியன்) மற்றும் 2006-ம் ஆண்டுகளில் (2-வது இடம்) இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. வருகிற 15-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அல்லது குரோஷியா ஆகிய அணிகளில் ஒன்றை பிரான்ஸ் எதிர்கொள்ளும்.
அதே சமயம் கடைசியாக விளையாடிய 24 சர்வதேச ஆட்டங்களில் தோற்றதில்லை என்ற பெல்ஜியத்தின் வீறுநடை இந்த தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்தது. அத்துடன் உலக கோப்பை போட்டியில் இறுதிசுற்றை எட்டியதில்லை என்ற பெல்ஜியத்தின் சோகமும் தொடருகிறது. அடுத்து 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் நாளை மறுதினம் விளையாட இருக்கிறது.
வெற்றிக்கு பிறகு பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் நிருபர்களிடம் கூறுகையில் ‘இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மிகப்பெரிய கவுரவமாகும். வீரர்களின் வெற்றி வேட்கைக்குரிய மனநிலையை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) இறுதி ஆட்டத்தில் தோற்றதன் வேதனை இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதற்கு பரிகாரமாக ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றியை ருசிக்க விரும்புகிறோம். பிரான்ஸ் மக்களுக்கு இதை விட இன்னும் மகிழ்ச்சியை அளிக்க முயற்சிப்போம்’ என்றார்.
இந்த வெற்றியை தாய்லாந்தில் குகையில் இருந்து சிக்கி மீண்ட இளம் ஹீரோக்களுக்கு சமர்ப்பிப்பதாக பிரான்சின் அணியின் நடுகள வீரர் பால் போக்பா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெல்ஜியம் அணியின் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் கூறுகையில், ‘இது மிகவும் நெருக்கமான ஆட்டமாக அமைந்தது. பிரான்ஸ் வீரர்களின் தடுப்பாட்டம் பாராட்டுக்குரியது. அவர்களின் முன்கள வீரர்கள் கூட தடுப்பாட்டத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தினர். அதே நேரத்தில் எங்களது வீரர்கள் கடைசி வினாடி வரை போராடினர். ஆனால் கோல் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. ஒரு அணி ஜெயிக்கும் போது, இன்னொரு அணி தோற்கத்தான் செய்யும். அதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஒரு ஆட்டம் (3-வது இடத்திற்கு) எஞ்சி இருக்கிறது. அதில் ஜெயித்து உயரிய நிலையுடன் தாயகம் திரும்ப விரும்புகிறோம். அதன் பிறகு 2020-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.