உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான ஜிடிபியை பொறுத்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, அதிகமான உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது இதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி நான்காவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பிரான்ஸ் இருந்து வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வலுவாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக இந்திய சில்லரை வர்த்தகத்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையும், 2019-ல் 7.8 சதவீத வளர்ச்சியையும் இலக்காக கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாக சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறும் என கடந்த ஆண்டு கூறியிருந்தது. மேலும், 2032 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கணித்து இருந்தது.