சென்னையில் தொடர் வழிப்பறியைத் தடுக்க 4-வது நாளாக போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 3,500 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உட்பட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. அதேபோல் இரவு நேரத்தில் பைக் ரேஸ் நிகழ்வுகளும் அரங்கேறின.

சுழற்சி முறை பாதுகாப்புப் பணி
இதைத் தொடர்ந்து குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ‘ஸ்ட்ராமிங் ஆப்ரேஷன்’ என்னும் ரோந்துப் பணியை முடுக்கி விட்டார். இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையிலும், 4 மணி தொடங்கி காலை 8 மணி வரையிலும் போலீஸார் சுழற்சி முறை யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 4-வது நாளாக போலீஸாரின் ரோந்துப் பணி மற்றும் வாகன தணிக்கை நடைபெற்றன. இதை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், போலீஸாருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 4 நாட்களில் 16,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
600 வாகனங்கள் பறிமுதல்
ரேஸிங் மற்றும் சரியான ஆவணம் இல்லாத 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3,500 ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.