மதிய உணவுடன் வாரம் 2 முறை பால் – மத்திய அரசு முடிவு!

அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், மதிய உணவுடன் வாரத்துக்கு 2 நாள் பால் வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன என மத்திய கால்நடைத்துறை மற்றும் பால் உற்பத்தித்துறைச் செயலாளர் தருண் ஶ்ரீதர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்தத் திட்டமானது ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.

பால்

உலகில் அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருந்தபோதிலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், உற்பத்தி செய்யும் பாலுக்குப் போதிய விலை கிடைக்காததால் சிரமப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் இந்த மாத தொடக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை வீணாக்காமல், முறையாகப் பயன்படுத்தவும், அதற்கான உரிய விலையை கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தருண் ஶ்ரீதர் கூறுகையில், “பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவுடன், வாரம் 2 முறைப் பால் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளிடம், அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பெரும்பாலான மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதனால், பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். மேலும், பால் சேமிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் மாநிலங்கள் இறங்கியுள்ளன’ என்றார்.

இந்தியாவில், தற்போது 2.30 லட்சம் டன் பால் பவுடர்கள் இருப்பில் உள்ளது. கடந்த நிதியாண்டின்படி, நாட்டின் பால் உற்பத்தியானது 6.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 254.5 மில்லியன் டன்னாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது மூலம் போதிய ஊட்டச்சத்தைக் குழந்தைகள் பெறுவது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு கருதுகிறது.

Leave a comment

Your email address will not be published.