எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் காலம் தாழ்த்தாமல் அமைக்கப்பட்டு விரைந்து செயல்பாட்டுக்கு வந்து, மக்கள் உடல் நலன் காப்பதில் உயர்தர சிகிச்சை தொடர்ந்து கிடைத்து, தமிழக மக்கள் பயன் பெற்று, மாநிலமும் வளர்ச்சி பெற, நாடும் முன்னேற்றம் காண மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் அமைய இருப்பது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் இப்போது மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
எனவே மத்திய அரசு காலம் தாழ்ந்து அறிவித்திருக்கின்ற வேளையில் இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடி பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை காலக்கெடுவிற்குள் கட்டி முடித்து, அதனை செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்பாட்டுக்கு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் தமிழக மக்கள் குறிப்பாக தென் தமிழக மக்கள் மருத்துவச் சேவையை பெற்று பலன் அடைய வேண்டும். அதிலும் தென் மாவட்டப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் உயர்தர மருத்துவச் சேவை, மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி போன்ற சேவைகளை பெற்று பயன் அடைய வேண்டும். அது மட்டுமல்ல அமைய இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகி, பொருளாதாரமும் மேம்படும்.
குறிப்பாக மாநில மக்களுக்கான உயர்தர மருத்துவச் சேவையை வழங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பான பங்களிப்பை நமது மாநிலத்தில் உள்ள மக்களும் பெற்று நல்ல உடல் நலத்துடன் வாழ இந்த மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு வர தமிழக அரசு தனது பணிகளை காலத்தே செய்ய வேண்டும்.
தமிழக மக்கள் நலன் காப்பதில் அதிலும் மக்களின் உடல் நலன் காப்பதில் தமிழக அரசுக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் திட்டமிட்டப்படி அனைத்து வசதிகளுடனும் நடைமுறைக்கு வந்து, மக்களுக்கு சிறப்பு மருத்துவச் சேவை தொடர்ந்து கிடைத்திட தனது பங்களிப்பை முறையாக அளித்திட வேண்டும்.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் காலம் தாழ்த்தாமல் அமைக்கப்பட்டு, விரைந்து செயல்பாட்டுக்கு வந்து, மக்கள் உடல் நலன் காப்பதில் உயர்தர சிகிச்சை தொடர்ந்து கிடைத்து, தமிழக மக்கள் பயன் பெற்று, மாநிலமும் வளர்ச்சி பெற, நாடும் முன்னேற்றம் காண மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.