காவிரி மேலாண்மை ஆணையத் தின் முதல் கூட்டம், டெல்லியில் இன்று நடக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத் துறை ஆணையர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினர் – செயலராக மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறியா ளர் ஏ.எஸ்.கோயல், உறுப்பினர்களாக மத்திய அரசு மற்றும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆணையத் தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை செயலா ளர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரளாவின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கூட்டம் என்பதால் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது, நிரந்தர அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்குவது போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
காவிரி ஆணையக் கூட்டம் தொடர்பாக கடந்த 29-ம் தேதி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, ஆணையம் அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடகா முடிவு எடுத்துள்ளது. அதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பேசவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.