மரம் காப்போம் வனம் காப்போம் சுற்றுச்சூழலைக் காப்போம் பூமியை காப்போம் என்பதெல்லாம் இன்று விழிப்புணர்வு கோஷங்களாக எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. புவி வெப்பமடைதல் பருவகால சுழற்சியில் பிறழ்சி என்று ஏதேதோ அசுறுத்தல்கள். விளைவு விழிப்புணர்வு கோஷங்கள்.
இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்தது வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு மாறானதை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டது அறிவியல் வளர்ச்சி என்ற அதீத போக்கு இப்படி என்னவெல்லாமோ. ஆனால் சுற்றுச்சூழலை குறிப்பாக மரங்கள காப்பாற்ற பழங்குடி மக்கள் நடத்திய வீர மரணப் போராட்டம் கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய .காணாமல் போன வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து கிடக்கின்றன.
ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் புதியதாக ஒரு அரண்மனையை கேஜர்லி காட்டுப்பகுதியில் கட்டுவதற்கு முடிவெடுத்தார். பிஷ்ணோய் என்ற பழங்குடி இனம் அந்த வனப்பகுதியில் வாழ்ந்து வந்தது. மன்னரின் முடிவு அநதப் பழங்குடி மக்களின் தலையில் பேரிடியாக விழுந்தது. மன்னரின் ஆணையைக் கேட்டு திடுக்கிட்டனர் தங்கள் உயிரினும் மேலான காட்டுமரங்களைப் படை பலத்தோடு வெட்ட வந்த வீர்ர்களை வழிமறித்தனர். ஆனால் அவர்களை மீறி மரத்தருகில் வீர்ர்கள் சென்றனர்.
அப்போது பழங்குடிகளில் ஒருவரான அம்ரித்தேவி தன் மூன்று குழந்தைகளோடு முதலில் இருந்த மரத்தை கட்டி அணைத்துக் கொண்டார். மன்னரின் உத்தரவை நிறைவேற்ற நான்கு பேரையும் வெட்டிக் கொன்று விட்டு அந்த மரத்தையும் வெட்டித் தள்ளினர் வீரர்கள். ஆனால் உடனிருந்த பழங்குடியின மக்கள் பின் வாங்கவில்லை. அத்தனை பேரும் அவர்களால் முடிந்த வரை மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டனர். இப்படியே 363 மரங்களையும் அவற்றைக் கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டி சாய்த்தனர் மன்னரின் வீர்ர்கள். ஒரு கட்டத்தில் போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்.என்று போர் வீர்ர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார் மன்னர்.
1730-ல் நிகழ்ந்த இந்தத் தியாகச் சம்பவம் தான் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக நடந்த உலகின் முதல் போராட்டம் என்கிற பெருமையை பெறுகிறது.🌐