மலேரியாவைக் குணப்படுத்தும் புதிய மருந்து பலனளிக்குமா… மருத்துவம் சொல்வது என்ன?

இந்த மருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தாலும், இப்போதுதான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration (FDA)) ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அதன் காரணமாகவே, இந்த மருந்து சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும், பயன்படுத்தலாம் என்பதில்லை. இது முதற்கட்டமாக மருந்துக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் மட்டுமே.

மலேரியாவைக் குணப்படுத்தும் புதிய மருந்து பலனளிக்குமா... மருத்துவம் சொல்வது என்ன? 

`2016-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுக்க 21 கோடியே 60 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்று அதிரவைக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம். அதிலும், மலேரியா பாதிப்பு, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறது. `ஒவ்வோர் ஆண்டும் மலேரியாவைத் தடுக்கவும், அதற்காகச் சிகிச்சையளிக்கவும் இந்தியா செலவிடும் தொகை 11 ஆயிரத்து 640 கோடி ரூபாய்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் மற்றொரு புள்ளிவிவரம். `இந்தியாவில் இன்னும் அடியோடு ஒழிக்க முடியாத நோய்களில் ஒன்று மலேரியா! இங்கே அதன் தாக்கமும் வீரியமும் மிக அதிகம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

காய்ச்சல்

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட அனோபிலெஸ் (Anopheles) என்ற ஒரு வகைக் கொசு மனிதர்களைக் கடிப்பதால், மலேரியா  பரவுகிறது. இந்தக் கொசுக்கள், கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் வழியாக, மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும். பின்னர் அவை ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகள் ஒரு வாரம்வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு மீண்டும் அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிப்பதால், மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

மலேரியா கொசு

இந்த வகை காய்ச்சலை குணப்படுத்துவதில் உள்ள சிக்கல், சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும், அதே ஒட்டுண்ணி பாதிப்பால் மீண்டும் மீண்டும் மலேரியா காய்ச்சல் ஏற்படலாம் என்பது. அதேபோல, `பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் வகை மலேரியாவுக்கு ஏற்கெனவே இருக்கும் மருந்துகளை, மருத்துவர்கள் பரிந்துரைத்த காலம்வரை தவறாமல் உட்கொள்வதால், மலேரியா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பலரும் செய்யும் தவறு… இந்தக் காய்ச்சல் குணமாவதுபோல் தெரிந்தாலே மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இதனால்,  மீண்டும் மலேரியா ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலையில்தான் மலேரியா பாதிப்புக்கு ஒரே ஒரு முறை உட்கொண்டாலே நிரந்தரமாக மலேரியா பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிடும் மருந்து ஒன்றுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration – FDA) ஒப்புதல் அளித்திருக்கிறது.

டாஃபேனோகுயின்’ (Tafenoquine) என்ற அந்த மருந்தை ஒருமுறை உட்கொண்டால் போதும், கல்லீரலில் மறைந்திருக்கும் ஒட்டுண்ணியை முற்றிலும் அழித்துவிடும்’ என்கிறார்கள் அதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள். ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மருத்துவத்துறை பேராசிரியர்கள் `இந்த மருந்து மலேரியாவைக் குணப்படுத்தும் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

“மலேரியா மற்ற காய்ச்சல்களைவிட தீவிரமானது. இன்றைக்கும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவது பல நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது. அதேபோல, பரிசோதனை தொடங்கி, சிகிச்சைவரை மற்ற காய்ச்சல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உதாரணமாக, காய்ச்சலுக்காக உட்கொள்ளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், மருந்துள் மற்ற காய்ச்சல்களுக்குக்கூட பலன் தரலாம். ஆனால், மலேரியா காய்ச்சலுக்கு அந்த மருந்துகள் பலன் தராது. அதேபோல மலேரியாவைக் குணப்படுத்துவதற்கான `ஆன்டிமலேரியல்’ (Anti-Malarial Medication) மருந்துகள் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கும் பலன் தருவதில்லை. மேலும், மலேரியா காய்ச்சல் இருக்கிறதா என்பதை முதல் வாரத்தில் பரிசோதனை செய்தாலே துல்லியமாகக் கண்டறிந்துவிடலாம். மற்ற காய்ச்சல்களைப் பொறுத்தரை இரண்டாவது வாரத்தில் பரிசோதித்தால்தான் சரியான முடிவு கிடைக்கும். அதேபோல மலேரியா பாதிக்கப்பட்டவருக்கு முதல் வாரத்திலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதனால்தான், வேறு காய்ச்சல் பாதிப்பு என்று மருத்துவமனைக்குச் சென்றால், மலேரியாவுக்கான பரிசோதனையையும் செய்துவிடுகிறார்கள்.

மருந்து

மலேரியாவுக்கென தடுப்பூசிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், குணப்படுத்துவதற்கு குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின் (Primaquine) போன்ற பல்வேறு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பிரைமாகுயின் மருந்தை 14 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஆனால், பலரும் காய்ச்சல் சரியாகிவிட்டால் பாதியில் நிறுத்திவிடுகிறார்கள். அந்த வகையில் இது மிக முக்கியமான மருந்துதான்.

இந்த மருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தாலும், இப்போதுதான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration (FDA)) ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அதன் காரணமாகவே, இந்த மருந்து சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிடும், பயன்படுத்தலாம் என்பதில்லை. இது முதற்கட்டமாக மருந்துக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் மட்டுமே. இதன் பிறகு மலேரியா காய்ச்சல் பாதித்தவர்களுக்குக் கொடுத்து, அவர்களிடம் `கிளினிக்கல் ட்ரையல்’ நடத்த வேண்டும். அதேபோல, அமெரிக்கா மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் இந்த மருந்தை விற்க இருக்கிறார்கள். அந்த நாடுகளிலும் இந்த மருந்து முறையாக பரிசோதனை செய்யப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகுதான் மருந்துப் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு சில ஆண்டுகள்கூட ஆகலாம்.

1 comment

Leave a comment

Your email address will not be published.