முதல் 4 நிமிடங்களுக்குள் இரு அணிகளும் கோல்; மோட்ரிச் விட்ட பெனால்டி வாய்ப்பு: டென்மார்க்கை பெனால்டியில் வீழ்த்தி காலிறுதியில் குரேஷியா

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் இறுதி 16 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

முதல் 4 நிமிடங்களுக்குள்ளேயே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்துச் சமன் செய்திருந்தன, அதன் பிறகு கோல் இல்லை, இதனையடுத்து கூடுதல் நேரம் தாண்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது, இதில் குரேஷியா 3-2 என்று வெற்றி பெற்றது.

குரேஷிய அணியின் வெற்றி ஹீரோ கோல் கீப்பர் சுபாசிச்தான். பெனால்டி ஷூட் அவுட்டில் டென்மார்க்கை வீட்டுக்கு அனுப்பினார்.

டென்மார்க்குக்காக மத்தியாஸ் ஸாங்கா ஜோர்கென்சன் 1வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, 4வது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் பதிலடி கொடுத்துச் சமன் செய்தார், பரபரத் தொடக்கம் இறுதி வரைக் காக்கப்பட்டதால் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

உ.கோப்பையின் அதிவிரைவு கோல்:

ஆட்டத்தின் 57வது விநாடியில் லாங் த்ரோ ஒன்றை குரேஷியா தடுக்கத் தவறியது, அந்த வாய்ப்பை டென்மார்க் வீரர் ஜோர்கென்சன் பற்றி கோலாக்கினார். பந்து முதலில் குரேஷியா கோல் கீப்பர் டேனியல் சுபாசிச்சினால் கோல் போஸ்டுக்குத் திருப்பி விடப்பட்டது, பிறகு பந்து கோட்டைக் கடந்து கோல் ஆனது. 2014 முதல். இதுதான் அதிவிரைவு கோல் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது.

இது நடந்து அடுத்த 3 நிமிடங்களில் டென்மார்க் பாக்ஸில் அசையாமல் இருந்த ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சென்னிடமிருந்து எதேச்சையாகப் பந்து பட்டு வர குரேஷியாவின் மண்டுகிச் கோலாக மாற்றி சமன் செய்தார்.

இரு கோல்கள் அடித்தாலும் இரு அணிகளின் உத்வேகம் குறையவில்லை, உடனே பாக்சிற்குள் 5 வீரர்களை அழைத்துத் தடுப்பாட்டம் ஆடவில்லை. இரு அணியினரும் வீர்ர்களைத் தொடர்ந்து முன்னணி நோக்கி முடுக்கியபடியே இருந்தனர்.

27வது நிமிடத்தில் டென்மார்க்குக்கு முன்னிலை பெற அருமையான வாய்ப்புக் கிடைத்தது, அப்போது டென்மார்க் வீரர் ப்ராத்வெய்ட் முயற்சியை குரேஷியாவின் கோல் கீப்பர் சுபாசிச் தடுத்தார். இதற்கு 2 நிமிடங்கள் சென்று குரேஷியாவின் ராக்கிடிக் ஒரு நீண்ட தூர ஷாட்டை முயன்றார் ஆனால் இதனை டென்மார்க்கின் காஸ்பர் ஷ்மீச்செல் வெற்றிகரமாகத் தடுத்தார். பந்து மீண்டும் பெரிசிச்சிடம் வர முதல் உதை சரிவர அமையவில்லை, ஷ்மீச்செல் கடும் நெருக்கடி கொடுக்க ஷாட்டை பெரிசிச் வெளியே அடித்தார்.

இரு அணிகளும் கடும் சவால்களுடன் ஆட ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை, முழு நேரத்திலும் 1-1 என்றே இருந்தது.

அதன் பிறகு கூடுதல் 30 நிமிட நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மோட்ரிச் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார், டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷ்மீச்செலுக்கு சற்று நெருக்கமாக அடித்து விட்டார் மோட்ரிச் அது தடுக்கப்பட்டது. யூரோ 2008-ல் காலிறுதியில் துருக்கியிடம் பெனால்டியில்தான் தோற்றது குரேஷியா.

சுபாசிச் தடுக்கும் பெனால்டி கிக்.| ஏ.எப்.பி.

பெனால்டி ஷூட் அவுட் பதற்றமாக அமைந்தது. டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் அடித்த பெனால்டி ஷூட் அவுட்டை குரேஷிய  கோல் கீப்பர் டேனியல் சுபாசிச் தட்டி விட்டார், அதே போல் லாஸே ஷோனி, மற்றும் நிகோலய் ஜோர்கென்சன் ஆகியோரது பெனால்டி ஷூட் அவுட்டையும் சுபாசிச் அபாரமாகத் தடுத்து ஹீரோவானார்.

டென்மார்க்கின் நுட்பமான கோல் கீப்பர் ஷ்மெய்ச்சல் குரேஷியாவின் மிலன் படேலியின் ஷாட்டைத் தடுத்தார், அதே போல் ஜோஸிப் பிவாரிச் ஷாட்டையும் வெற்றிகரமாகத் தடுத்தார். கடைசியில் குரேஷியாவின் இவான் ராக்கிடிக் ஷாட் கோலாக குரேஷியாவுக்கு மூச்சு வந்தது. காலிறுதியில் ரஷ்யாவைச் சந்திக்கிறது குரேஷியா.

ஆட்ட நேரத்தில் பெனால்டி கிக்கை கோலாக மாற்றத்தவறிய மோட்ரிக் பெனால்டி ஷூட் அவுட் ஷாட்டையும் திருப்திகரமாக அடிக்கவில்லை. டென்மார்க்கின் நுட்ப கோல் கீப்பர் ஷ்மெய்ச்சல் காலணி மீது பந்து பட்டது ஆனால் கோலைத் தடுக்க முடியவில்லை.

வெற்றிக் கொண்டாட்டத்தில் சுபாசிச்சை தூக்கிப் போட்டு விளையாடினர் குரேஷிய வீரர்கள் கீழேயும் போட்டனர். நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை.  ‘கோல்கீப்பர் சுபாசிச்தான் எங்கள் ஹீரோ’ என்றார் அணி மேலாளர் ஸ்லாட்கோ டேலிச்.

முதல் நிமிடங்களின் கோல்கள் தவிர ஆட்டம் இறுக்கமாகச் சென்றது, ஆனால் பரபரப்பு ஒன்றுமில்லை, ஸ்பெயின் ரஷ்யா ஆட்டம் போல் நல்ல விறுவிறுப்பு என்று கூற முடியாது. டென்மார்க் அணி அதன் அறியப்பட்ட ஆக்ரோஷத்துடன் ஆடவில்லை, ஆங்காங்கே சில மின்னல்கள் தோன்றின, மற்றபடி பெரிய அச்சுறுத்தல் இல்லை.

Leave a comment

Your email address will not be published.