மும்பை குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி பெண் பைலட் உட்பட 5 பேர் பலி

மும்பை: தனியாருக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று நேற்று மும்பை காட்கோபரில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேர் உட்பட 5 பேர் உடல் கருகி பலியானார்கள்.
யூ.ஒய். ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘கிங் ஏர் சி 90’ என்ற குட்டி விமானம் நேற்று மதியம் 1 மணியளவில் ஜூகுவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த குட்டி விமானம் இன்னும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஈடுபடுத்தப்படவில்லை. அதற்கு முன்னோட்டமாக விமானம் சோதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், நேற்று யூ.ஒய். ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த பெண் பைலட் மாரியா ஜூபேரி, துணை பைலட் பிரதீப் ராஜ்புத் மற்றும் இன்ஜினியர்கள் சுரபி, மனீஷ் பாண்டே ஆகியோர் அந்த விமானத்தை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். ஜூகு விமான நிலையத்தில் இருந்து சரியாக மதியம்  1 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 1.15 மணியளவில் காட்கோபர் சர்வோதயா நகர் பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் வானில் அலைபாய்ந்த விமானத்தை தரையிறக்குவதற்கு தோதான இடத்தை பைலட் தேடினார். இதனால் விமானத்தை வழக்கமான உயரத்தை விட மிகத்தாழ்வாக பறக்கச் செய்தார். இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அந்த விமானம் சர்வோதயா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த அடுத்த நொடியில், அதில் இருந்து எரிபொருள் கசிந்ததால் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த மாரியா ஜூபேரி, பிரதீப் ராஜ்புத், சுரபி, மனீஷ் பாண்டே ஆகியோரும் அந்த வழியாக நடந்து சென்ற கோவிந்த் பண்டிட் என்பவரும் உடல் கருகி அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் விமானம் விழுந்த கட்டிடமும் பலத்த சேதத்திற்குள்ளானது. விமானம் விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து போனார்கள். அவர்கள் தங்களது வீட்டுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருள் அந்த பகுதியில் உள்ள சாலையில் கசிந்தோடி தீப்பற்றி எரிந்தது. இதனால், மக்களிடையே பீதி அதிகரித்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சோப்பு நுரையை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகு விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிர் தப்பிய 250 மாணவர்கள்

காட்கோபரில் நேற்று கீழே விழுந்து நொறுங்கிய விமானம் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிட வளாகத்திற்குள் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பலர் உயிர் தப்பினர். சம்பவம் நடந்த இடத்தின் பின்புறம் தான் 250 மாணவர்கள் படிக்கும் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் உள்ளது. விமானம் சற்று தள்ளி அந்த இடத்தில் விழுந்திருந்தால், பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விமானம் விழுந்த இடத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஹரிபாய் பட்டேல் கூறுகையில், ‘‘விமானம் மிக தாழ்வாக பறந்தவாறு வட்டமடித்தது. பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் மற்றும் ஒரு மரத்துக்கு இடையே விழுந்து தீப்பிடித்தது. அந்த விமானத்தில் பைலட் விமானத்தை தரையிறக்க சமவெளியை தேடியதுபோல தெரிகிறது. ஆனால், விமானத்தை அவர் செலுத்திய இடம் கட்டுமான வேலை நடக்கும் இடம் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.

உ.பி. அரசு விற்பனை செய்த விமானம்

விபத்துக்குள்ளான ‘கிங் ஏர் சி 90’ விமானத்தை இதற்கு முன்பு உத்தரப் பிரதேச அரசு பயன்படுத்தி வந்தது. சமீபத்தில்தான் இந்த விமானம் தேவையில்லை என கருதிய உ.பி. அரசு, அதை யூ.ஒய். ஏவியேஷன் நிறுவனத்திடம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த குட்டி விமானத்தில் 12 பேர் பயணம் செய்யலாம்.

பூஜை நடத்தி வழியனுப்பி வைக்கப்பட்ட விமானம்

‘கிங் ஏர் சி 90’ விமானம் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு நேற்றுதான் முதல் சோதனை ஓட்டத்துக்கு தயாரானது. இதனால், அந்த விமானம் ஜூகு விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு விமானத்துக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமானம் புறப்பட்ட 15வது நிமிடத்தில் விபத்துக்குள்ளானது.

Leave a comment

Your email address will not be published.