நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியான பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஷி ஆண்டிகுவா நாட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டதும் அவரை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. இந்நிலையில், மெகுல் சோக்ஷிக்கு குடியுரிமை கொடுத்த ஆண்டிகுவா அரசின்மீது இந்திய தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால், மெகுல் சோக்ஷி ஆண்டிகுவாவுக்கு வந்த சமயத்தில் அவர்மீது இந்திய அரசாங்கம் எந்தவித மோசமான குற்றச்சாட்டையும் சுமத்தவில்லையென்றும், அவர் `மிஸ்டர் க்ளீன்’ என்ற அடையாளத்தோடுதான் இருந்தார் என்று ஆண்டிகுவா அரசு அதிகாரிகள் கூறினார்கள்.
மெகுல் சோக்ஷி ஆண்டிகுவாவுக்குச் சென்ற பிறகுதான் அவர் மீதான வங்கி மோசடி குற்றச்சாட்டுகளே அம்பலத்துக்கு வந்தன என்றும், இந்திய காவல்துறை தரப்பிலிருந்து அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியதால் மும்பை பாஸ்போர்ட் அலுவலகமும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அவர்மீது குற்றச்சாட்டு வைக்காத சூழலில்தான் அவர் ஆண்டிகுவாவின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துப் பெற்றார் என்றும் ஆண்டிகுவா அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், செபி அமைப்பு மெகுல் சோக்ஷியின் நிறுவனம் குறித்து 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் குற்றச்சாட்டு வைத்ததாகவும், முதல் குற்றச்சாட்டு திருப்திகரமாக முடித்துவைக்கப்பட்டதாகவும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு தகுந்த சாட்சிகள் இல்லாமல் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை செபி மறுத்தது. இப்படி இரண்டு நாட்டு அரசாங்கங்களும் மாற்றிமாற்றி குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் வேளையில், உண்மை எப்போது வெளிவருமென்று பொதுமக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.
thanks