மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு

மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதனமாக 6 பவுன் செயின் பறிப்பு

மேச்சேரி, செப்.19: மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில், 6 பவுன் தங்க செயினை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.மேச்சேரி அருகே கூனாண்டியூரைச் சேர்ந்தவர் அம்மாசி மனைவி காந்தியம்மாள்(70). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வருகிறார். நேற்று காய்கறிகளை வாங்குவதற்காக, மேச்சேரி சந்தைக்கு வந்துள்ளார். அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கீழே கிடந்த பர்ஸ், உங்களுடையதா என கேட்டுள்ளார். அதற்கு அது எனது பர்ஸ் இல்லை என காந்தியம்மாள் கூறிய போது, சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் வந்து, எனது பர்ஸ் தொலைந்து விட்டது. பார்த்தீர்களா என கேட்டுள்ளார். மேலும், நீங்கள் தான் எடுத்திருக்கிறீர்கள், இல்லையெனில் இருவரும் அருகே உள்ள கோயிலில் வந்து சத்தியம் செய்தால் தான் நம்புவேன் என கூறினார். இதையடுத்து, கோயிலில் சத்தியம் செய்வதற்காக, காந்தியம்மாள் அந்த பெண்ணுடன் சென்றுள்ளார். கோயில் அருகே சென்றதும், நகையை கழற்றி விட்டு சத்தியம் செய்யும்படி அந்த நபர் கூறினார். இதனால், காந்தியம்மாள் தான் அணிந்திருந்த 6 பவுன் செயினை கழற்றியுள்ளார். அப்போது, முந்தானையில் முடிந்து வைத்து கொள்ளும்படி அவர்கள் கூறினர். பின்னர், சத்தியம் செய்துவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது, முந்தானையில் நகைக்கு பதில் மணல் மட்டுமே இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,சம்பவம் குறித்து மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.🔴