உச்ச நீதிமன்ற நீதிபதியாக உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோஸப்பை நியமிக்கும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியத்தின் பரிந்துரையை நீண்ட இழுபறிக்குப்பின் மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொலியத்துக்கும், மத்திய அரசுக்கும் இருந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும். மத்திய அரசு அதைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. இது காலம் காலமாக நடந்து வரும் முறையாகும்.
இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, 2 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
அதில் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப் ஆகிய இருவராகும். இதில் இந்து மல்ஹோத்ராவின் பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு நீதிபதி ஜோஸப் பெயரை ஏற்க மறுத்து, அவரின் பெயரை மறுபரிசீலனை செய்யக் கோரி கொலிஜியத்துக்கு திருப்பி அனுப்பியது.
அதற்குக் காரணமாக, நீதிபதி ஜோஸப்புக்கு முன், சீனியாரிட்டி அடிப்படையில் 11 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதாலும், கேரள உயர் நீதிமன்றத்தின் பிரதிநிதித்துவ அடிப்படையில் நீதிபதிகள் இருப்பதாலும், தற்போது ஜோஸப்பின் பெயருக்கு ஒப்புதல் அளிக்க முடியாது எனக் கூறி மீண்டும் ஆய்வு செய்ய கொலிஜியத்துக்கு மத்திய அரசு பதில் அனுப்பியது.
இதனால், நீதிபதி கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதில் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் உருவாகியது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதி ஜோஸப்பின் பரிந்துரையை நியாயப்படுத்தினார், மேலும் கொலிஜியத்தின் முடிவில் அரசு தலையிடுவது குறித்து ஆலோசிக்க கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2-வது முறையாக கொலிஜியம் கூடியபோது, மீண்டும் கே.எம். ஜோஸப்பின் பெயரை பரிந்துரை செய்து அனுப்பியது. இதனால், கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் வலுத்தது.
ஜோஸப் நியமனத்தில் இழுபறி ஏன்?
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக ஜோஸப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் பதவியில் இருந்தபோது, எம்எல்ஏக்கள் பாஜக தரப்பில் அணி மாறி குழப்பம் ஏற்பட்டது.
இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அது தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோஸப் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மீண்டும் காங்கிரஸ் முதல்வர் ஹரிஸ்ராவத் ஆட்சியைக் கொண்டுவந்தார். இது அப்போது பாஜகவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனால் நீதிபதி கே.எம்.ஜோஸப்பை உச்ச நீதிபதியாக உயர்த்த மத்திய அரசு மறுப்பதாகக் காரணம் கூறப்பட்டது. ஆனால், இதை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மறுத்தார். பிரதிநித்துவ அடிப்படையில் போதுமான அளவு கேரளாவுக்கு இடம் அளிக்கப்பட்டுவிட்டதால், ஜோஸப் நியமனத்தை நிராகரிக்கிறோம் என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப்பின், கொலிஜியம் 2-வது முறையாக அளித்த பட்டியலில் மூத்த நீதிபதிகள் அடிப்படையில் உத்தகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோஸப், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி(கொல்கத்தா), குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண்(அலகாபாத்) ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்து அனுப்பி இருந்தது. அந்தப் பரிந்துரையை இப்போது மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து இந்த நீதிபதிகள் 3 பேரும், விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்க உள்ளனர்.
இதற்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, 2014-ம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கொலிஜியம் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்தது. ஆனால் அவரின் பெயரையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருங்கியவராக இருந்த கோபால் சுப்பிரமணியம்,கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கடுமையான வாதங்களை எடுத்துவைத்து வாதாடி, மிகத்தீவிரமாகச் செயல்பட்டார். அந்தக் காரணத்தால் அப்போது அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.