2015-ம் ஆண்டு நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு யர்சாகும்பாவைப் பறிக்க சென்ற நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது.

யர்சாகும்பா என்பது ஒருவகை காளான் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். ‘இமயமலை வயாகரா’ என்றும் இதனை அழைக்கின்றனர். சீனா தவிர, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா, மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளின் சர்வதேச சந்தைகளில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நேபாளம், பூடான், இந்தியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில்தான் யர்சாகும்பா காணப்படும். இமயமலைத் தொடரில் 3,300 அடி முதல் 4,000 அடிவரை உள்ள பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படும். மழைக்காலத்துக்குப் பின்னர் ஃபங்கஸ் எனும் பூஞ்சை தாக்கத்தால் இறந்துபோகும் கம்பளிப்பூச்சியிலிருந்து யர்சாகும்பா உருவாகிறது. இறந்துபோகும் கம்பளிப்பூச்சிமேல் வெப்பம் பரவும்போது யர்சாகும்பா வெளிவரத் துவங்கும். அந்தநேரத்தில் இதைப் பறித்துவிட வேண்டும். இல்லையெனில் மழைக்காலத்தில் முற்றிலுமாக நீங்கிவிடும். யர்சாகும்பாவைப் பறிக்கும் கதைதான் கொஞ்சம் சுவாரஸ்யமானது.
இக்காளான் பறிப்புக்காகவே வசந்தகாலத்தில் நேபாளத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகின்றன. அப்போது மாணவர்கள் யாரும் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். இதுதவிர, மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் யர்சாகும்பாவைப் பறிக்கச் செல்வதால் பள்ளிகள் மூடப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு யர்சாகும்பாவைப் பறிக்கச் சென்ற நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது. காளானைப் பறிக்கச் செல்லும் ஒவ்வொரு மாணவனும் 1 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுகிறார், என்பது கூடுதல் தகவல். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பார்த்துவிடுகிறார்கள். அதற்கு மேல் வருமானம் பார்க்கும் குடும்பங்களும் உண்டு. சிறுவர்கள் வேகமாக ஏறி இறங்க முடியும் என்பதால்தான் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை யர்சாகும்பா பறிப்புக்கு அழைத்துச் செல்கிறார்கள்.