யுரேனியம் செறிவூட்டும் திறனை அதிகரிப்போம்: ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு ஈரான் தகவல்

வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு உட்பட்டு யுரேனியம் செறிவூட்டும் திறனை அதிகரிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு ஈரான் கடிதம் எழுதி உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். அதேநேரம் இதில் கையெழுத்திட்ட மற்ற நாடுகள் ட்ரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்குமாறு ஈரானின் அதிகாரம் மிக்க தலைவர் அயதொல்லா அலி கமேனி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் எங்களுடைய அணுசக்தி திட்டங்களை நாங்கள் பாதுகாப்போம் என்றும் அவர் சபதம் எடுத்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதால், யுரேனியம் செறிவூட்டலை அதிகரிப்பதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி முகமையின் செய்தித்தொடர்பாளர் பெரூஸ் கமல்வந்தி, அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில், “வல்லரசு நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு உட்பட்டு யுரேனியம் செறிவூட்டும் திறனை அதிகரிக்க உள்ளோம். இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமைக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.

1 comment

Leave a comment

Your email address will not be published.