ரஜினிக்கு ஓப்பனிங் பாடும் எஸ்.பி.பி.

ரஜினிக்காக மறுபடியும் எஸ்.பி.பி. ஓப்பனிங் பாடல் பாட இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பல வருடங்களாகவே ரஜினி நடிக்கும் படங்களின் ஓப்பனிங் பாடல்களை எஸ்.பி.பி. தான் பாடி வருகிறார். அது எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. எஸ்.பி.பி.யை ஓப்பனிங் பாடலைப் பாட வைத்துவிட வேண்டும் என்பது ரஜினியின் எழுதப்படாத விதி.

ஆனால், ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களில் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை. பா.இரஞ்சித் இயக்கிய இந்தப் படங்களுக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இரண்டு படங்களிலும் அருண்ராஜா காமராஜ் தான் ஓப்பனிங் பாடலை எழுதி, பாடியிருந்தார்.

இந்நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்க, சனந்த் ரெட்டி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி.யை பாடவைக்க அனிருத் முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இரண்டு படங்களுக்குப் பிறகு எஸ்.பி.பி. குரலில் ரஜினி ஆடுவதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published.