ரஷ்ய ஓபன் பாட்மிண்டன்: சவுரவ் வர்மா சாம்பியன்

ரஷ்யாவில் நடைபெற்று வந்த ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்யா ஓபன் டூர் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரவ் வர்மாவும், ஜப்பான் வீரர் கோகி வத்தனாபேவும் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய சவுரவ் வர்மா 19-21 21-12 21-17 என்ற செட் கணக்கில் கோகி வத்தனாபேவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். முதல் செட்டை இழந்தபோதிலும் அடுத்த 2 செட்களிலும் சுதாரித்து விளையாடி சவுரவ் வர்மா வெற்றி கண்டார். இந்த சீசனில் அவர் பெறும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ல் சவுரவ் வர்மா அகில இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டியில் தங்கமும், சீன தைபே கிராண்ட்ப்ரீ போட்டியில் தங்கமும், பிட்பர்கர் ஓபன் போட்டியில் வெள்ளியும் வென்றிருந்தார்.

ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோஹன் கபூர்-குஹு கார்க் ஜோடியும், ரஷ்யாவின் விளாடிமிர் இவனோவ் – கொரியாவின் மின் குயுங் கிம் ஜோடியும் மோதின.

இதில் இந்திய ஜோடி 19-21, 17-21 என்ற கணக்கில் ரஷ்ய ஜோடியிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. – பிடிஐ

Leave a comment

Your email address will not be published.