ராமேசுவரம் அருகே கழிவுநீர் தொட்டிக்கு தோண்டிய போது கடற்கரையில் புதைத்த ஆயுத குவியல் சிக்கியது

ராமேசுவரம் அருகே கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுத குவியல் சிக்கியது. பெட்டி, பெட்டியாக துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
ராமேசுவரம்,

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ஆயுத குவியல் பற்றிய விவரம் வருமாறு:- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்கோவில் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக நேற்று பணியாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது 3 அடி ஆழத்தில் குழியில் ஒரு இரும்புப்பெட்டி தென்பட்டது. இதையடுத்து அது புதையலாக இருக்கலாம் என்று வீட்டின் உரிமையாளர் எடிசன் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசார் மீண்டும் அந்த பகுதியில் ஆழமாக தோண்டி இரும்பு பெட்டியை மேலே கொண்டு வந்து பார்த்தனர்.

இதில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன் படுத்தும் 19 தோட்டா பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் மீண்டும் தோண்டியபோது 5 கண்ணிவெடி பெட்டிகள், கையெறிகுண்டுகள் 15, ராக்கெட் லாஞ்சர் தோட்டா 2 பெட்டி உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தோண்டத்தோண்ட வெடிகுண்டு, ஆயுதங்கள் கிடைத்த வண்ணம் உள்ளதால் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:-

இங்கு கிடைத்திருக்கும் ஆயுதங்கள், தோட்டாக் கள் 25 வருடங்களுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் பரிசோதனைக்குப் பின்னரே முழுவிவரம் தெரியவரும். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தோண்டிப் பார்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் 1983-ல் இருந்து ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக் கும் இடையே போர் நடந்து வந்தது. அந்த காலகட்டத்தில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டன.

அப்போது ராமேசுவரம் தீவு பகுதியில் 14 இடங்களில் இலங்கை போராளிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தங்கச்சிமடம் பகுதியில் பத்மநாபா தலைமையில் இ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முகாம் செயல்பட்ட தாகத் கூறப்படுகிறது. அப்போது இந்த பகுதியில் துப்பாக்கி தோட்டாக்கள், குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.