பாலவாக்கத்தில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை வைத்து இருந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
நேற்று பாலவாக்கத்தில் உள்ள பால் மையத்துக்கு சென்ற அவர், 100 ரூபாயை கொடுத்து பால் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த பால் மைய ஊழியர் சரவணன், அது கள்ளநோட்டு போல் இருப்பதால் சந்தேகம் அடைந்து, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, அபுஇப்ராகீம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்த ரூ.100 மற்றும் ரூ.50 ஆகிய நோட்டுகளை கைப்பற்றினார்கள்.
அப்போது அவரது குடும்பத்தினர், நாங்கள் வங்கியில் இருந்துதான் அந்த பணத்தை எடுத்தோம் என்றனர். இதையடுத்து வங்கியில் சென்று போலீசார் விசாரித்தனர். அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் பணத்தை ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து நாகசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கைப்பற்றிய ரூ.100 மற்றும் ரூ.50 ஆகிய நோட்டுகளை வங்கியில் கொடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 50 ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகள் என்பதும், ஆனால் 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக நாகசுப்பிரமணியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரது குடும்பத்தினர், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து 100 ரூபாய் நோட்டுகளையும் சிறிது சிறிதாக தாங்கள் பல ஆண்டுகளாக வீட்டில் சேமித்து வந்ததாக கூறினர்.
எனினும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ரூ.10 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.