‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் சிசிடிவி கேமிராவில் சிக்கினர்

‘ரைசிங் காஷ்மீர்’ தலைமை பத்திரிக்கை ஆசிரியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் சிசிடிவி கேமிரா காட்சியில் சிக்கியுள்ளனர். #ShujaatBhukhari
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் ஷுஜாத் புகாரியை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி (வயது 53), அமைதி தீர்வில் மிகவும் நம்பிக்கை கொண்டவர், அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பள்ளத்தாக்கு பகுதியில் பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது. பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநில போலீசும் விசாரணையை அதிதீவிரப்படுத்தி உள்ளது.
காஷ்மீர் போலீஸ், பத்திரிக்கையாளர் ஷுகாத் புகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளது.
சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ள போலீஸ் குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களை பிடிக்கவும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து உள்ளது. போலீஸ் வெளியிட்டு உள்ள காட்சியில் பயங்கரவாதிகள் அவர்களுடைய முகத்தை மூடியுள்ளனர். ஷுஜாத் புகாரியுடன் அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் நேற்றைய பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். ஷுஜாத் புகாரி பல ஆண்டுகளாக தி இந்து பத்திரிக்கைக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஷுகாத் புகாரி கொல்லப்பட்டதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள செய்தியில் பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published.