லேன்ட்லைன் போனிலும் வீடியோ கால் வசதி – அசத்தும் பிஎஸ்என்எல்…

லேன்ட்லைன் போன்களை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த வழி செய்யும் அம்சங்களை சேர்க்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் லேன்ட்லைன்களில் ஸ்மார்ட்போன் அம்சங்கள் வழங்குவதற்கான அப்கிரேடுகளை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லேன்ட்லைன் மாடல்களில் எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச்-கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தில் (Next Generation Networking ) அப்கிரேடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் பண்டி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. பண்டி மற்றும் ஹின்டொலி பகுதிகளில் அப்கிரேடு செய்யப்பட்டு மற்ற பகுதிகளில் வரும் நாட்களில் அப்கிரேடு செய்யும் பணிகள் நிறைவடையும் என டெலிகாம் மாவட்ட மேலாளர் பி.கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.
மொபைல் போன்களில் சாட்டிங், எஸ்எம்எஸ், வீடியோ காலிங், பெர்சனல் ரிங் பேக் டோன் உள்ளிட்டவற்றை லேன்ட்லைன் போன்களிலும் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த வசதிகளை பயன்படுத்த லேன்ட்லைன் போன் IP போனுடன் அப்கிரேடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
லேன்ட்லைன் நம்பர்களை மொபைல் போனுடன் இணைத்து லேண்ட்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். அந்த வகையில் லேன்ட்லைன் அழைப்புகளை மொபைல் போனிலும் பெற முடியும். இத்துடன் 2ஜி டவர்கள் இனி காம்போ பிடிஎஸ்-ஆக அப்கிரேடு செய்யப்படும் என்பதால் 3ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

Leave a comment

Your email address will not be published.