லைசென்ஸ் வழங்குவதில் முறைகேடுகளை தடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: லைசென்ஸ் வழங்குவதில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் போக்குவரத்து அதிகாரிகளின் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நான்கு சக்கர, இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு இதுவரை எட்டு (எஸ் வளைவு) போட வேண்டும். ஆனால், இந்த முறையை தற்போது போக்குவரத்து துறை மின்னணு முறையான ‘எச் டிராக்’ முறையை முதல் முதலில் கரூர் வட்டார போக்குவரத்துக் அலுவலகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை முன்மாதிரி திட்டமாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மின்னணு முறை தொடர்பாக எந்த விளக்கமும் பயிற்சியும் இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்குத் தரவில்லை. இந்த புதிய முறையால்   ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்தும் எங்கள் சங்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய முறை தொடர்பாக விதிகளில் மாற்றம் கொண்டுவரும்வரை பழைய முறையே தொடர வேண்டும் என்றும் அதுவரை ‘எச் டிராக்’ முறையை  நடைமுறைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி, உரிய முன்னறிவிப்போ பயிற்சியோ தராமல் மின்னணு முறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான முறையை தமிழக அரசு நவீனப்படுத்தியுள்ளது. இதை எதிர்க்கவோ, இந்த விவகாரத்தில் தலையிடவோ மனுதாரர் அமைப்புக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கு இதுவரை எஸ் வளைவு முறை பின்பற்றப்பட்டது. தற்போது, இதற்குப்பதிலாக துல்லியமான முறையில் ஓட்டும் திறனை அளவிடுவதற்காக ‘எச் டிராக்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளில் இது போன்ற மாற்றங்களுக்கு தடை இல்லை. எனவே, இந்த மாற்றத்துக்கு பயிற்சி பள்ளிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமே தவிர, எதிர்க்கக்கூடாது.  வாகனங்களை ஓட்டுபவர்கள் உரிய பயிற்சி இல்லாமல் இருந்தாலும் ஓட்டுநர் லைசென்ஸை வாங்கிவிடுகிறார்கள். இதனால், விபத்துகள் அதிகம் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது அதிகரித்துள்ளது.

வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவதில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலை உள்ளது. இந்த ஊழலை ஒழிக்க புதிய முறை அவசியமாகிறது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் சம்மந்தப்பட்ட பகுதி ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளும் சேர்ந்து தகுதியில்லாதவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறைகேடுகளைச் செய்கிறார்கள். பயிற்சி பள்ளிகள் ஆர்டிஓ அலுவலகங்களில் அதிகம் தலையிடுவதற்கு காரணம் லஞ்சம்தான். இந்த ஊழலை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டிய, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் காரணியாகும்.  ஊழலை தடுக்க அரசு கொண்டுவரவுள்ள மின்னணு ‘எச் டிராக்’ தேர்வு முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.  லைசென்ஸ் ெபறுவதற்காக லஞ்சம் பெறுவது

அதிகரித்துவிட்டது. எனவே, இந்த ஊழல் முறைகேடுகளை தடுக்க அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை 3 மாதத்தில் பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் முழுநேரம் இயங்க வேண்டும். கேமராக்கள் செயல்பட வில்லை என்றால் அவற்றை ஒருவாரத்திற்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை போக்குவரத்து ஆணையர் எடுக்க வேண்டும்.
தரகர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகங்களின் உள்ளே எந்த தடங்கலும் இல்லாமல் வந்து செல்கிறார்கள். இதைத் தடுக்க அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து ஆர்.டி.ஓ.க்களுக்கும் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் சிறப்புக் குழுக்களை அமைக்கவும், இந்த குழுக்கள் மூலம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தவும், லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது இரக்கம் காட்டக்கூடாது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை அவர்கள் மீது எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் பணிக்கு சேருவதற்கு முன்பும், சேர்ந்த பின்பும் அவர்கள் பெயரிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்களை கணக்கிட வேண்டும். அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை பெற வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து ஆர்டிஓ அலுவலங்களுக்கும் 4 வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்பி அதன் பிறகு  4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.சொத்துக் கணக்கு கட்டாயம்

* எஸ் வளைவுக்கு பதில் மின்னணு எச் டிராக் முறையால் ஓட்டுநரின் திறனை துல்லியமாக கணிக்க முடியும்.
* வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவதில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
* ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் பணிக்கு சேருவதற்கு முன்பும், சேர்ந்த பின்பும்  அவர்கள் பெயரிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கப்பட்ட  சொத்துக்களை கணக்கிட வேண்டும்.

Leave a comment

Your email address will not be published.