குறுகிய கால கடன்களுக்காக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தி இருக்கிறது. ரெபோ விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவீதமாக இருக்கிறது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ரெபோ விகிதம் 6.50 சதவீதமாக இருக்கிறது.
இந்த வட்டி விகித உயர்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
இதேபோல ரிவர்ஸ் ரேபோ விகிதமும் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை
யாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வட்டி விகிதம் உயர்வு எதிர்பார்க்கப்பட்டதுதான். இப்போதைக்கு உடனடியாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை. இன்னும் சில வாரங்களுக்கு பிறகு முடிவெடுப்போம் என எஸ்பிஐ செய்தி தொடர்பாளர் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெபாசிட் விகிதத்தை 0.05 சதவீதம் முதல் 0.1 சதவீதம் வரை எஸ்பிஐ உயர்த்தியது.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் கடன்களுக்கான மாத தவணை உயரும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு 8.50 சதவீத வட்டியில் 60 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் தற்போது 52,069 ரூபாய் மாததவணையாக செலுத்த வேண்டி இருக்கும். தற்போது 0.25 சதவீத உயர்வால் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்த்தபட்டால் மாதத்தவணை ரூ.53,022 செலுத்த வேண்டி இருக்கும்.
கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்தாலும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும் என பேங்க்பஸார் தலைமைச் செயல் அதிகாரி அதில் ஷெட்டி கூறினார்.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை குழு அக்டோபர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடக்க உள்ளது. தொடர்ந்து இரண்டு முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
பங்குச்சந்தையில் சரிவு
நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் இருந்தாலும் ரிச்ர்வ் வங்கியின் முடிவு காரணமாக சந்தையின் வர்த்தகம் சரிந்து முடிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37711 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது. ஆனால் மதியம் ரிசர்வ் வங்கி முடிவுகள் வெளியானதால் சரிவு ஏற்பட்டு 37521 புள்ளியில் சென்செக்ஸ் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே நிப்டியும் 11390 புள்ளியை தொட்டது. முடிவில் 11346 புள்ளியில் வர்த்தகம் முடிந்தது. கடந்த எட்டு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1255 புள்ளிகள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.