புதுடில்லி : வட மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. இந்நிலையில் மேலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிக்கி தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது குஜராத் மற்றும் உத்தரகாண்டில் மழை வெளுத்து வாங்க துவங்கி உள்ளது.
உத்தரகாண்டின் பிதோரகர் பகுதியில் உள்ள முக்கிய பாலம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. பகோட் – பின்னு இடையேயான நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. சாலையில் குவிந்த மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மணிப்பூரின் தமேங்லாங் பகுதியில் மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட், குஜராத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.