வயதின் காரணமாக நலிவு! – கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம்

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே கோபாலபுரம் திரும்பினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரம் கடந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

மருத்துவமனையின் அறிக்கை

இதுகுறித்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது. இதற்காக, அவரது வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.