தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய மலைவாச சுற்றுலா தளங்களான இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை நடத்தப்பட்டு வருகிறது. `பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் மத்திய சுற்றுலாத்துறை இச்சேவையை நடத்தி வருகிறது. சுற்றுலா பயணிகளிடம் இது பெரும் வரவேற்பை பெற மற்றப் பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்த மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தமிழகத்திலும் இதற்கான ஆய்வுகள் நடந்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பேசிய மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில், “பவான் ஹன்ஸ் லிமிடெட்டின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தமிழகத்தில் தொடங்குவதற்கு குறித்த ஆய்வுகளை மாநில அரசுடன் இணைந்து நடத்தப்பட்டது. மதுரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதில், சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.