சென்னை:”துாத்துக்குடியில், சில விஷமி களும், சில அரசியல் கட்சி தலைவர்களும், சுயநலத்திற்காக, அப்பாவி மக்களை பயன்படுத்தி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்,” என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா இருந்த போது, 2013 மார்ச், 29ல், ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூட, மின் இணைப்பை துண்டித் தார். ஆனால், தேசிய பசுமை தீர்ப்பாயம், மின் இணைப்பு வழங்கவும், ஆலையை தொடர்ந்து நடத்தவும், சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், ஜெ., மேல்முறையீடு செய்தார். தற்போது, அந்த வழக்கு நடந்து வருகிறது. ஏப்ரல், 9ல், ஆலையை தொடர்ந்து இயக்க, அனுமதி கோரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம்,ஆலை நிர்வாகம் விண்ணப்பித்தது; அதை, அரசு நிராகரித்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில், ஆலைக்கு வழங்கும் மின் இணைப்பு, நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே, சில எதிர்க்கட்சியினரும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அப்பாவி மக்களைதுாண்டிவிட்டு, இப்படி போராட்டத்தை நடத்துகின்றனர். அரசு சார்பில், நான்கைந்து மாதங்களாக, கலெக்டர், சப் – கலெக்டர் ஆகியோர், 14 முறை, போராட்டக்காரர்களை அழைத்து பேசி, அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கமாக தெரிவித்து உள்ளனர்.
இதற்கு முன், அறவழியில் போராட்டம் நடத்தினர். இம்முறை வேண்டுமென்றே, சில எதிர்க்கட்சிகள் துாண்டுதலால், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி மக்களை பயன்படுத்தி, இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க போராட்டத்தை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. துாத்துக்குடிக்கு, நாங்கள் செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.
அங்கு, 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. முதலில், சட்டத்தை மதிக்க வேண்டும்; அமைதி திரும்ப வேண்டும்; மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும்.ஊர்வலம் வந்தவர்கள், காவல் துறையினரை தாக்கியதும், போலீசார் கண்ணீர் புகை வீசினர்; பின், தடியடி நடத்தினர். அதை யும் மீறி, கலவரக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து, வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடி யிருப்பில் புகுந்து, வாகனங்களை கொளுத்தி னர். இதனால், இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது.
ஒருவர் அடிக்கும் போது, அடிபடுபவர் தடுப்பது இயற்கை. இச்சம்பவம் திட்டமிட்டு செய்யப் படவில்லை. கலவரம் ஏற்படும் என தெரிந்து இருந்தால், முன்னெச்சரிக்கையாக கைது செய்திருப்பர். ஒவ்வொரு முறை போராட்டம் நடந்தபோது, அமைதியாக நடந்தது.
அவர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப் பட்ட பின்னரும், சில சமூக விரோதிகள் ஊடுருவி, தவறான பாதையில் அழைத்து சென்றதால், இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.