சென்னை: வெப்பம் வாட்டி வந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னையில் நேற்று திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 வாரமாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழையின் வேகம் சற்று குறைந்துள்ளது. அதேசமயம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை முதல் சென்னையில் வெயில் தாக்கம் சற்று குறைந்தது. இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில், நேற்று மீண்டும் சென்னையில் வெயில் அதிகரித்தது. ஆனால், எதிர்பாராத விதமாக இரவு 7 மணியளவில் நகரின் பல இடங்களில் திடீரென மழை பெய்தது. 15 நிமிடமாக இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எழும்பூர், மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கடற்கரை சாலை, திருவல்லிகேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழை குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வெப்பசலனம் காரணமாகவே மழை பெய்துள்ளதாக தெரிவித்தனர்.