தூத்துக்குடி வன்முறை நிகழ்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட போது, ‘‘இதுபோன்ற சூழல்களால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படுகிறது’’ என்ற குரலும் எழுந்தது. இதுபற்றிய தெளிவைப் பெறுவதற்காக, ஜூலை 20-ம் தேதி The Sterlite Story unplugged என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. சென்னை சர்வதேச மையம் (Chennai International Centre) என்ற அமைப்பு சென்னையில் பல்வேறு கருத்தரங்குகளை நடத்திவருகிறது. அந்த அமைப்பே இதையும் நடத்தியது. இதில் ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத், சூழலியல் செயற்பாட்டாளர் நாகசைலா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஜி ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கோட்டூர்புரத்தில் இருக்கும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நெறிப்படுத்தினார்.
முதலில் பேசிய நாராயணன், ‘‘தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்குமான யுத்தம் எப்போதும் தொடரும். வருங்காலத்தில் இது இன்னும் அதிகமாகும். தூத்துக்குடி சம்பவத்தை நாம் இதற்கான ஒரு நிஜமாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான சூழலில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி உரையாடவே இந்தக் கருத்தரங்கு” என்றார்.