சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டைமைப்பு சார்பில் இன்று (27-06-2019) கலந்து கொண்டோம். ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தன்னுடைய வாதத்தை தொடங்கியுள்ளார். ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த வித சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை ஏற்படுத்தவில்லை என்றும், எவ்வித சட்ட மீறல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், காப்பர் ஸ்லாக்கில் எவ்வித நச்சுத்தன்மையும் இல்லை என்றும், சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முறையில் தொழில் செய்து வருகிறதென்றும், ஆலை மூடியதால் இந்தியாவில் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் அதை ஈடு செய்ய சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதன் மூலம் போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்களென்று யூகிக்கலாம் எனவும் தெரிவித்தார். இத்தகைய ‘தீவிரமான’ குற்றத்தை போராடிய மக்கள் மீது சுமத்திய ஆலை நிர்வாகம் தான் தாக்கல் செய்த 100 பக்கத்திற்கு அதிகமான பிரமாண வாக்குமூலத்தில் ஒரு இடத்தில் கூட இதை குறிப்பிடவில்லை. 7லட்சம் மக்கள் வசிக்கக் கூடிய தூத்துக்குடியில் 20 ஆயிரம் பேர் மட்டுமே மே-22 போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் எனவும் தெரிவித்தார். சிலரின் தூண்டுதலால் நடைபெற்ற போராட்டத்திற்கு பயந்து அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாகவும், அரசின் உத்தரவு எந்த வகையிலும் நிலைக்கத் தக்கதல்ல என்றும் வாதிட்டார். ஸ்டெர்லைட்டின் வாதத்தில் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை எந்த உண்மையும் இல்லை என்பதை மக்கள் அறிவார்கள். காலை 11.30 க்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை அவர் ஒருவர் மட்டுமே வாதிட்டுள்ளார். இன்னும் 3 அல்லது 4 நாட்கள் இன்னும் முழுமையாக தான் வாதிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை (28-06-2019) விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளையும் இவருடைய வாதமே தொடருமென தெரிகிறது. அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.விஜயநாராயணனும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞ்ர்கள் C.S. வைத்தியநாதன் மற்றும் விஷ்வநாதன் ஆகியோரும், வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பேராசிரியர் பாத்திமா பாபு தரப்பில் வழக்கறிஞர் பூங்குழலியும், CPM சார்பில் வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம், வைகோ தரப்பில் அவரே தனக்காகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டனும், மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் சக்தி முருகன் ஆஜராகினர்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தன்னுடைய வாதத்தை தொடங்கியுள்ளார்.
