ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில், இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டின் அனைத்து குடிமக் களுக்கும் ஆதார் எண் வழங்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செய்து வருகிறது. ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வசதியாக நாடு முழுவதும் சேவை மையங்கள், இணையதளத்தில் திருத்தம் செய்ய வசதிகளையும் யுஐடிஏஐ செய்துள்ளது.
இந்த நிலையில் யுஐடிஏஐ-யின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-300-1947 என்ற எண் மாற்றப்பட்டு 1947 என்ற புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் கட்டணமில்லா சேவையே ஆகும்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய எண்ணானது ஸ்மார்ட்போன்களில் உள்ள கான்டாக்ட் லிஸ்ட்டில் தானாகவே பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ட்விட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும்போது இந்த புதிய எண் தானாகவே, அவர்களது ஸ்மார்ட்போன்களில் பதிவாகியுள்ளது. ஆதார் எண்ணைப் பெற்றவர்களுக்கும், ஆதார் எண்ணைப் பெறாதவர்களுக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த எண் தானாகவே பதிவாகியுள்ளது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
எங்களுடைய அனுமதி இல்லாமலேயே இந்த புதிய எண்ணானது ஸ்மார்ட்போன்களில் தானாகவே பதிவாகி விடுகிறது. இது எப்படி என்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக பலர் யுஐடிஏஐ-க்கு கேள்வியெழுப்பி இ-மெயிலும் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக யுஐடிஏஐ விளக்கம் தரவேண்டும் என்று பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் எல்லியட் ஆல்டர்சன் யுஐடிஏஐ-வுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.
ஆனால், உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை என ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.
ஆதார் தொடர்பான தகவல்கள் பாதுகாப்புடன் உள்ளதா என்ற அச்சம் ஏற்கெனவே பலரிடம் உள்ளது. இதுதொடர்பாக சந்தேகம் தெரிவித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் ஆர்.எஸ். சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விடுத்தார்.அவரது ஆதார் எண் மூலம் பல தகவல்களை திருடிய ஹாக்கர்கள் அவரது வங்கிக் கணக்கில் ரூ.1-ஐ அனுப்பி அவரது சவாலுக்கு பதில் தந்தனர்.
இதனிடையே, உதவி எண்கள் மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில் ‘‘கடந்த 2014 -ம் ஆண்டு ஆதார் ஆணைய சேவை எண்ணும் , பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கோடிங் செய்யப்பட்டு விட்டது. தற்போது வரை இது தொடர்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.
பயனாளர்களின் ஆண்ட்ராய்டில் விதிகளை மீறி எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை. விரைவில் இந்த பிரச்சினை சரி செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த விளக்கத்திற்கு பிறகு சேவை எண் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.