சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவிரிப் படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கி உள்ளன.
இவற்றில் 67 இடங்களில் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை காவிரி படுகையில் எடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது தமிழகத்துக்கு இழைத்த அநீதி என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலளித்து பேசுகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.
இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி வழங்கப்படாது. தமிழகத்தில் இருந்து ஹைட்ரோகார்பனை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
இதுவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு இசைவு வழங்கவில்லை. இனியும் வழங்க மாட்டோம். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தை அதிமுக அரசு தடுத்து நிறுத்தியது. செயல்படுத்தாத ஒரு திட்டத்துக்கு மக்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
2 Attachments
|
|
|
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.. அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டம்.
