⚜கண்டக்டர் இல்லாமல் மேலும் 500 பஸ் இயக்க முடிவு
சேலம்: முக்கிய நகரங்கள் இடையே, கண்டக்டர் இல்லாத, மேலும், 500 பஸ்கள் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு, ‘1 டூ 1, பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், சிட்டி எக்ஸ்பிரஸ்’ பெயர்களில், முக்கிய நகரங்கள் இடையே, கண்டக்டர் இல்லாமல் இயக்க, 2018 ஜூலை, 5ல், 510 பஸ்கள் வழங்கப்பட்டன. அதில், பயணிக்க விரும்புவோர், நேர கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிக்கெட் பெற்று, பஸ்சில் ஏறினர். அப்படி டிக்கெட் எடுக்காதவர்களுக்கு, இரு கண்டக்டர்கள், பஸ்களில் டிக்கெட் வழங்கிவிட்டு, பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கி, வேறு பஸ்களில், டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், 500 கண்டக்டர்கள் செய்ய வேண்டிய பணியை, 50 பேர் செய்தனர். இத்திட்டம், சேலம் – பெங்களூரு; ஈரோடு – கோவை, திருப்பூர்; நெல்லை – தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் வரவேற்பை கொடுத்தது. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் மட்டும், பயணியரை ஏற்றுவதோடு, குறிப்பிட்ட நேரத்தில், பயண இடத்தை அடைவதால், பயணியர் மகிழ்ச்சியடைந்தனர். இத்திட்டத்தால், கண்டக்டர், டிரைவர் என, இரு பணிக்கு, தனித்தனியாக ஆட்கள் தேர்வு செய்யும் முறை ஒழிக்கப்பட்டு, இரண்டையும் ஒருவரே மேற்கொள்ள, ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது. தற்போது, விரைவு போக்குவரத்துக்கழகத்தில், கண்டக்டராக, 900 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 2020ல் ஓய்வு பெற்ற பின், கண்டக்டர் பணி முழுமையாக ஒழிக்கப்படுகிறது. அதை, முன்னுதாரணமாக வைத்து, பிற போக்குவரத்துக்கழகங்கள், கண்டக்டர் பணிக்கு, ‘கல்தா’ கொடுக்க முடிவு செய்துள்ளது. அதனால், தமிழகம் முழுவதும், கண்டக்டர் இல்லாத, மேலும், 500 பஸ்களை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.*🌐