15 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் படத்தில் நடிக்கிறார் நாகர்ஜுனா.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனா நடிப்பில் கடைசியாக வெளியான பாலிவுட் படம் ‘லாக் கார்கில்’. ஜே.பி.தத்தா தயாரித்து இயக்கிய இந்தப் படம், 2003-ம் ஆண்டு ரிலீஸானது. அஜய் தேவ்கன், சஞ்சய் தத், கரண் நாத், சுனில் ஷெட்டி, சஃயீப் அலி கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல், ரவீனா டாண்டன் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்தனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு வேறெந்த பாலிவுட் படத்திலும் நடிக்காத நாகர்ஜுனா, 15 வருடங்கள் கழித்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘பிரம்மாஸ்திரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜுனா. சூப்பர் ஹீரோ ஃபேன்டஸி படமாக உருவாகும் இதை, தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.