18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை நேற்று வழங்கினர். இதனால், இறுதி முடிவை எட்டுவதற்காக வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனக்கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. 18 எம்எல்ஏ-க்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.எஸ்.ராமன் மற்றும் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தமிழக முதல்வர், பேரவைத் தலைவர், துணை முதல்வர், அரசு தலைமை கொறடா ஆகியோரது சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, ஆர்யமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன், சி.திருமாறன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறமுடியாது. பேரவைத் தலைவர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அதனடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் பேரவைத் தலைவர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே நீதிமன்றங்கள் தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும்.
பேரவைத் தலைவர் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை மீறி முடிவு எடுத்தாலோ, அவரது முடிவில் சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

ஆனால் இந்த வழக்கில் பேரவைத் தலைவரால் இந்த சட்ட விதிகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக பேரவைத் தலைவர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படவில்லை. அதனால் 18 எம்எல்ஏ-களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏற்கனவே தகுதி நீக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியதாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. கட்சியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல்தான் என்று கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பேரவைத் தலைவர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்ைல. பேரவைத் தலைவர் உத்தரவில் இயற்கை நீதி எவ்விடத்திலும் மீறப்படவில்லை. பேரவைத் தலைவர் உத்தரவில் விதி மீறல்கள் உள்ளதா, சட்டவிரோதமானதா, உள்நோக்கம் கொண்டதா என்பதை உறுதியாக கூற முடியாது. இரு கருத்துக்கள் நிலவும் போது எது சரியானது என்று அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக என்னால் உறுதியாக கூற முடியவில்லை. எனவே, இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட அரசியலமைப்பில் அனுமதியில்லை. எனவே, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, நீதிபதி எம்.சுந்தர், தன்னிடம் உள்ள தீர்ப்பு நகலை பிரித்து வாசிக்கும்போது, தலைமை நீதிபதியின் உத்தரவில் இருந்து, இந்த வழக்கில் நான் மாறுப்பட்டு தீர்ப்பு அளிக்கிறேன் என்று கூறி தீர்ப்பை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது: பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது. இதேபோன்ற பிரச்னையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சிதாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், அவர்களில் பின்னர் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார். மனுதாரர்களுக்கு அவர்களின் தரப்பு விளக்கங்களைக் கொடுக்க பேரவைத் தலைவர் உரிய வாய்ப்புகளைத் தரவில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது தெளிவாகிறது.  அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, பேரவைத் தலைவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைத்துவிடக் கூடாது.

இந்த காரணங்களுக்காக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது, செல்லாது.
இவ்வாறு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இரண்டு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால் வழக்கின் முடிவை எட்டுவதற்காக இந்த வழக்கை மூன்றாவது ஒரு நீதிபதிக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான குலுவாடி ஜி. ரமேஷ் முடிவு செய்வார் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை வழங்கிய பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், 18 தொகுதிகள் காலியாகிவிட்டதாக அறிவிக்கக்கூடாது. பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று 2017 செப்டம்பர் 20ம் தேதி நீதிபதி துரைசாமி பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு…

தலைமை நீதிபதி காலை 9.30 மணிக்கே தனது அறைக்கு வந்து தீர்ப்பில் சில திருத்தங்களை செய்ததாக கூறப்பட்டது. பின்னர் 11 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்தார். அவருடன் நீதிபதி ஆஷாவும் வந்தார். இருவரும் 12.30 மணி வரை பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்தனர். சரியாக 12.35 மணிக்கு தலைமை நீதிபதியும், நீதிபதி ஆஷாவும் இருக்கையில் இருந்து அறைக்கு திரும்பினர். 1.10 மணிக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். அதற்கு முன்பு நீதிமன்ற அறை முழுவதும் வக்கீல்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 6 தீர்ப்புகளை வரிசையாக இருவரும் வாசித்து கையெழுத்திட்டனர். நேரம் ஆக, ஆக நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களிடயே பரபரப்பு தொற்றிகொண்டது. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பை முதலில் தலைமை நீதிபதி வாசித்தவுடன் நீதிமன்றத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அப்போது நீதிபதி சுந்தரின் முகம் இருக்கமாக இருந்தது. இரு நீதிபதிகளின் தீர்ப்பைத்தான் தலைமை நீதிபதி வாசிக்கிறார் என்று எல்லோரும் கருதினர். இதனால், இதுதான் இறுதி முடிவென்று வக்கீல்கள் பேசிக்கொண்டனர். அப்போது நீதிபதி சுந்தர் தான் எழுதிய தீர்ப்பின் நகலை கையில் எடுத்து, புன்முறுவலுடன் வாசிக்க தொடங்கினார். தொடக்கத்திலேயே தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து நான் மாறுபடுகிறேன் என்று கூறி தீர்ப்பை வாசித்தார். இதைகேட்டதும் நீதிமன்றத்தில் இருந்தவர்களிடையே திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பலரும் நீதிமன்ற அறையில் இருந்து யாருக்கும் தெரியாமல், வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை வெளியில் அனுப்பியபடியே இருந்தனர். தீர்ப்பு வாசித்து முடித்தவுடன். நேற்று காலை 10 மணி முதல் 1.40 வரை தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது இந்த வழக்கின் தீர்ப்பு.

பட்டாசுடன் வந்து, வெடிக்காமல் சென்ற வக்கீல்கள்

பெருவாரியான பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வர கூடும்  என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள, பாரிமுனை பகுதியில் போலீசார்  குவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு வந்தவர்களையும்  போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பினர். இதேபோல் மிக முக்கியமான தீர்ப்பு என்பதால் சட்ட கல்லூரி மாணவர்கள் தீர்ப்பை  கவனிப்பதற்காக நீதிமன்றதில் குவிந்தனர். தீர்ப்பு ஒரு மணிக்கு  வாசிக்கப்படும் என்பதால், 12.50 மணிக்கெல்லாம் உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு  நிரம்பி வழிந்தது. அரசு தரப்பில் வக்கீல் திருமாறன், டிடிவி தினகரன்  தரப்பில் வக்கீல்கள் எம்.எல்.ஜெகன், ஆர்.என்.பாபு ஆகியோர் தலைமையில் கொண்ட  வக்கீல்கள் தீர்ப்பை கொண்டாட பட்டாசுகளுடன் நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால்,  தீர்ப்பு வருவதற்கு முன்பு இருந்த பரபரப்பு முற்றிலும் காணாமல் போனது.  மேலும் பட்டாசுகளுடன் காத்திருந்தவர்களும் அமைதியாக சென்றனர். மொத்தத்தில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.