‘2.0’ கிராபிக்ஸில் என்ன பிரச்சினை? – 2019 இறுதியில் தான் வெளியாகுமா?

கரிகாலன் ரஜினிக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ரோபோ விஞ்ஞானி வசீகரன் ரஜினி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற விசாரணையைத் தொடங்கினோம். ‘2.0’ படக்குழுவின் கிராஃபிக்ஸ் குழு வட்டாரத்திலிருந்து மூச்சு முட்டுகிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்தன. அவற்றைப் பார்க்கும்முன் ‘2.0’ படத்தின் கதைக்களம் பற்றி விசாரித்தால் அசரடிக்கும் தகவல் காதுகளை எட்டியது.

காதலைத் தவிர ஏதுமில்லை!

இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதைக்களம். அந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது. அதற்கு அனைத்து உணர்ச்சிகளும் வந்துவிடுகின்றன. அந்த இன்னொரு ஸ்வீட் ஹார்ட் ரோபோ பற்றிய தகவல் பரம ரகசியம் என்கிறார்கள். இதில் அக்‌ஷய்குமார் எப்படிப்பட்ட வில்லன் என்பது சஸ்பென்ஸ் என்கிறது இயக்குநர் வட்டாரம். உலோக இதயங்களின் காதலை மையப்படுத்தினாலும் இதில் ரோபோக்களின் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும், மனிதர்களை ரோபோக்கள் எப்படிப் பார்க்கின்றன ஆகிய இரண்டு அம்சங்களை ஷங்கர் காட்சிகளின் வழியே ஹைலைட் செய்திருப்பதை ஹாலிவுட் புகழப்போகிறது என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

முழுக்க ரோபோக்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் குறைவுதான், ஆனால் ரஜினி உருவத்தில் இருக்கும் 3டி அனிமேஷன் ரோபோவின் அதகளம்தான் முழுப் படமும் என்கிறது படக்குழு. 3டி அனிமேஷன் கதாபாத்திரங்களை நடக்கவும் பேசவும் ஆக்‌ஷன் செய்யவும் வைக்கும் கிராஃபிக்ஸ் பணிகளே படம் தாமதம் ஆகக் காரணம் எனத் தெரியவந்திருக்கிறது.

3டி மாடலிங்

2015, டிசம்பர் 16-ம் தேதி ‘2.0’ படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் முக்கியமான 3டி மாடலிங் (ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் கிராபிக்ஸில் உருவாக்கி, அவற்றை நடக்க, ஓட வைக்கும் முக்கியப் பணி இது. இந்தப் பணியை ஏற்றுச் செய்துவந்த நிறுவனம் திடீரெனத் திவாலாகிவிட்டது. அந்நிறுவனம் செய்தவரையிலான பணிகளை எடுத்துச் சென்று அமெரிக்காவிலுள்ள மற்றொரு நிறுவனத்திடம் கொடுத்ததாம் ‘2.0’ குழு. இந்தப் பணியை முடிக்க அந்த நிறுவனம் ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. 3டி கதாபாத்திரங்களைக் கொண்டே முக்கியமான காட்சிகளை நகர்த்தவேண்டி இருப்பதால், இந்த கிராஃபிக்ஸ் வேலையை முதலில் முடிப்போம் என்ற நிலைக்கு ‘2.0’ குழு தள்ளப்பட்டு இருக்கிறதாம்.

திணறும் கம்ப்யூட்டர்கள்

‘2.0’ படத்தைத் தொடக்கத்தில் 8K காட்சித் தரத்தில் படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகளை கம்ப்யூட்டரில் தரவிறக்கி, கிராஃபிக்ஸ் செய்து அவுட் எடுப்பதற்குப் படாதபாடுபட்டிருக்கிறார்கள். காரணம் 8k-ல் காட்சிகளின் அளவு (File size) பெரிதாக இருந்த காரணத்தால் அவற்றை கிராஃபிக்ஸில் கையாள்வது பெரும் சவாலாக இருந்தது. 8K-ல் ஒரு ப்ரேம்மை விட்டு அடுத்த ப்ரேமுக்கு செல்லவே அரைமணி நேரம் பிடித்திருக்கிறது.

இப்பிரச்சினை தொடங்கியவுடன் விழித்துக்கொண்ட படக்குழு 4K காட்சித் தரத்தில் படப்பிடிப்பை மாற்றிக்கொண்டுவிட்டதாம். தவிர தற்போது தமிழ்நாட்டில் பெருவாரியான திரையரங்குகளில் 2K டிஜிட்டல் புரஜெக்டர்கள்தான் இருக்கின்றன. ஆனால், ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் அனைத்துமே 4K மற்றும் 8K-வில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கிறார்கள். குறைந்தது 4K திரையிடல் தரத்துக்கு மாற்றும்படி திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் ‘2.0’ படக்குழு.

3டி படப்பிடிப்பு

8k மற்றும் 4k படப்பிடிப்புகள் ஒருபக்கம் இருக்க, பார்வையாளர்களுக்கு 3டி அனுபவத்தை வழங்குவதற்காக மொத்த படத்தையும் 3டி கேமராவில் படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள். 3டியில் படப்பிடிப்பு செய்யும்போது காட்சிகள் அனைத்தும் RGB எனப்படும் (Red, Green, Blue) மூன்று லேயர்களாக மட்டுமே பிரியும். 2-டியில் படப்பிடிப்பு செய்து 3டி கிராஃபிக்ஸ் செய்வது கடினம். அதுவே 3டி கேமராவில் படப்பிடிப்பு செய்துவிட்டால் 3டி கிராஃபிக்ஸ் எஃபெக்ட்டுகளை கொண்டுவருவது எளிதானது. இந்த கிராஃபிக்ஸ் பணியைப் படத்தின் மற்ற கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகே தொடங்க முடியும்.

‘உச்சகட்ட’ பிரம்மாண்டம்

‘2.0’ படத்திலும் பிரம்மாண்ட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை வடிவமைத்து இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர். இதை முழுவதுமே கிராஃபிக்ஸில்தான் உருவாக்க வேண்டுமாம். இந்த சண்டைக் காட்சியில் மோதும் ரோபோக்கள் சிலநொடிகளுக்கு ஒருமுறை வெவ்வேறு தோற்றத்துக்கு மாறுவது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டு இருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறதாம் கிராஃபிக்ஸ் குழு.

கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்தவரை, இயக்குநர் ஷங்கர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டார் என்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்துக்கான முதற்கட்டப் பணிகளை கவனித்து வரும் நேரத்திலும், ‘2.0’-வின் கிராஃபிக்ஸ் பணிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்கிறார்கள்.

‘2.0’-க்கு முன்பு

கிராஃபிக்ஸ் டீமில் உள்ள கண்காணிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது “வெளிநாட்டில் மிக முக்கியமான கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்த பிறகே படம் எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியும்” என்றார். வெளிநாட்டுப் பணிகள் முடிவடைந்தவுடன் லைவ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் கிராஃபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் ‘கம்பாசிட்டிங்’ (Compostiting) வேலைகள் தொடங்கும். இதற்கு மட்டுமே இரண்டு மாதங்கள் தேவைப்படும்.

அதன்பிறகு கலரிங் வேலைகள் தொடங்கும். இதில் நடிகர்கள் நடித்துப் படம்பிடிக்கப்பட்ட ‘லைவ் ஆக்‌ஷன்’ காட்சிகளில் இருக்கும் வண்ணமும் கிராஃபிக்ஸ் காட்சிகளில் இருக்கும் வண்ணத்தையும் மேட்ச் செய்து ஒரேமாதிரி தோன்றச் செய்யும் ஜாலம் இது. இதற்கு மூன்று மாதங்கள் பிடிக்கும்” என்கிறார்கள். இதற்கிடையில் ரூ.400 கோடிக்குத் திட்டமிடப்பட்ட ‘2.0’ கிராஃபிக்ஸ் வேலைகள் கூடிக்கொண்டே செல்வதால் தற்போது பட்ஜெட் ரூ.600 கோடியை நெருங்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தகவல் கிடைக்கிறது.

கிராஃபிக்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களை வைத்துப் பார்த்தால், 2019-ம் ஆண்டு இறுதியில்தான் ‘2.0’ வெளியாகும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் வெளியாகிவிடலாம் என்கிறது கோடம்பாக்கம்.

Leave a comment

Your email address will not be published.