சிவா நடித்துள்ள ‘தமிழ்ப்படம் 2’வின் இசை வெளியீட்டு விழா, வருகிற 29-ம் தேதி நடைபெற இருக்கிறது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘தமிழ்ப்படம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது. முதலில் ‘தமிழ்ப்படம் 2.0’ என்றுதான் இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்தனர். ஆனால், பூஜ்யத்துக்கு மதிப்பில்லை என்பதால், ‘தமிழ்ப்படம் 2’ என்று தலைப்பை மாற்றி விட்டனர்.
சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயின்களாக திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் நடித்துள்ளனர். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன், சஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘வாடா வாடா காமா…’ என்று தொடங்கும் குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார் கஸ்தூரி.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நான் யாருமில்ல’ என்ற வீடியோ பாடல் நேற்று வெளியானது. ரஜினி, கமல், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன் என ஒருவரைக் கூட விடாமல் கலாய்த்த இந்தப் பாடல், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தப் பாடல்களும் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 29) வெளியிடப்பட இருக்கிறது.
‘எங்கள் இசை உங்களை நோக்கி… ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என அறிவித்துள்ளது படக்குழு.