நீதித் துறையின் முதல் திருநங்கை முகம்

பெருமிதப் பேரணி (Pride Rally) நடக்கும் மாதம் என்ற அளவில் முக்கிய மாதமாக ஜூன் மாதம் எல்.ஜி.பி.டி. சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. சட்டப் படிப்பு படித்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்திருக்கும் முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளாவை, இந்த பிரைடு மாதத்தின் இன்னொரு பெருமை எனலாம்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருநங்கை ஜோயிதா மண்டல், லோக் அதாலத் நிகர்நிலை நீதிபதியாகக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகளுக்காகப் பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவரும் மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மாவும் லோக் அதாலத்தில் உறுப்பினராக இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட சத்யஸ்ரீ ஷர்மிளா (பெற்றோர் வைத்த பெயர் உதயகுமார்), சிறுவயதிலிருந்தே தன்னைப் பெண்ணாக உணர்ந்தார். தனக்கு ஒரு அண்ணனும் இரண்டு தம்பிகளும் இருப்பதாகச் சொல்லும் அவர் பரமக்குடி அரசுக் கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். 2007-ல் சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து முடித்திருக்கிறார்.

நீ கூவாகத்துக்குப் போகலையா?

“பள்ளியில் எனக்கென நண்பர்கள் வட்டம் இருந்தது. அவங்க என்கிட்ட அன்பா பழகினாங்க. அவங்க குடும்பத்துல இருந்தவங்களும் என்கிட்ட பாசமா இருப்பாங்க. சில மாணவர்கள் மட்டும் என்னிடம் கலாட்டா பண்ணுவாங்க. கூவாகம் திருவிழா நடக்குறப்ப, “என்ன நீயெல்லாம் அங்க போகலையா?”ன்னு ஆளாளுக்குக் கேலி பண்ணுவாங்க” என்று சொல்லும் சத்யஸ்ரீயின் உணர்வை அவரது குடும்பம் புரிந்துகொள்ளவில்லை.

அவர் ஆணாக இருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்கள். அவருடைய தந்தைக்கு சத்யஸ்ரீ மீது பிரியம் அதிகம். மகனைச் சட்டம் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். சத்யஸ்ரீயின் மாற்றம் குறித்து குடும்பத்தினர் எதுவும் சொல்லாதபோதும் அவராகவே வீட்டை விட்டு வெளியேறினார்.

“அப்போ நான் சட்டக் கல்லூரியில ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். திருநங்கைகளோடு சேர்ந்து அவங்க பிரச்சினைகளுக்காகப் போராட என் சட்டக் கல்வியைப் பயன்படுத்த நினைச்சேன். ஷர்மிளா அம்மாதான் குருவாகவும் தாய்க்கு இணையாகவும் என்னை ஆதரித்து காப்பாத்திட்டு வர்றாங்க” என்கிறார் சத்யஸ்ரீ.

இந்தியாவில் திருநங்கைக்கு உரிய அங்கீகாரத்தோடு தான் மாற்றி வைத்துக்கொண்ட பெயரில் வழக்கறிஞராகப் பதிவுசெய்ய வேண்டும் என்பதில் சத்யஸ்ரீ உறுதியாக இருந்தார். ஆனால், இவர் சட்டப் படிப்பை முடித்தபோது, திருநங்கைகளுக்கு எந்தவித சட்டபூர்வம்மான அங்கீகாரமும் இல்லை. அதன் பிறகு மாற்றுப் பாலினத்தவரை மூன்றாம் பாலினமாக அறிவித்து 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பையடுத்து அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் மூன்றாம் பாலினத்தவர் எனும் பதத்தைப் பயன்படுத்தும் போக்கு பரவலானது. நாடு முழுவதும் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது. “அதுக்கப்புறம் இந்தியாவிலேயே முதன்முறையாக பார்கவுன்சில்ல வழக்கறிஞராக இப்போ நான் பதிவுசெய்திருக்கிறேன்” என்கிறார் சத்யஸ்ரீ.

இதுவும் மனித உரிமைதான்

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கிறது. மற்றபடி வங்கி, ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் அவர்களுக்கென ஒரு பைலா (bylaw) இருக்கும். அதன்படிதான் அவர்களால் விதிமுறைகளை உருவாக்க முடியும். இன்னமும் திருநங்கைகளைப் பற்றிய முழுமையான தெளிவு பலருக்கும் இல்லை” என சத்யஸ்ரீ வருத்தப்படுகிறார்.

ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து வெளியேறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திருநம்பி குறித்த புரிதல் சமூகத்தில் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் அவர்கள் வெளியேறுவதும் குறைவு. அவர்களுக்கான வாய்ப்புகளும் குறைவாகத்தான் இருக்கின்றன. “ஒரு திருநங்கையோ திருநம்பியோ ரோட்டில் நடக்கும்போது அவர்களை வித்தியாசமாகப் பார்க்காத நிலை வரணும். எங்களுக்கான உரிமை என்பது மனித உரிமையே” என்கிறார் அவர்.

7 comments

Leave a comment

Your email address will not be published.