இந்த ஹேக்கர்கள் யார்? இந்தக் கும்பல் எங்கிருந்து செயல்படுகிறது?

திண்டிவனத்தை அடுத்த அயன்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். வீட்டிலேயே ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.

ஒரு நாள் வழக்கம் போல் கணினியை ஆன் செய்து பணிகளைத் தொடங்கியுள்ளார். அப்போது அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. எப்போதும்போல் அதை ஓபன் செய்து பார்த்த அவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. நன்றாக செயல்பட்டு வந்த அவரின் கணினி, திடீரென நின்று போனது. குழப்பமடைந்த கண்ணன் என்ன செய்வதென அறியாமல் திகைத்தார்.

சிறிது நேரத்தில் தானாகவே கணினி அதுவாகவே இயங்கத் தொடங்கியது. பிரச்னை முடிந்தது என நினைத்த கண்ணனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் காணாமல் போயிருந்தன.

அதில் சில ஃபைல்கள் இருந்தும், அவரால் அதனை ஓபன் செய்யவே முடியவில்லை. அதன் பின் வந்த மற்றொரு மின்னஞ்சலை கண்ணன் படித்தபோது, இது பணம் பறிக்க ஹேக்கர்கள் செய்கின்ற வேலை என்பது தெரியவந்தது.

1120 அமெரிக்க டாலர்களை, ஆன்லைனில் செலுத்தினால் மட்டுமே, கண்ணனின் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை ஆவணங்களும் திரும்ப ஒப்படைக்கப்படும் எனக் கூறியுள்ள ஹேக்கர்கள், இல்லாவிடில் அவற்றை அழித்துவிடப்போவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரைப் பெற்ற காவல்துறையினர், விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்றதொரு சம்பவம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 24ஆம் தேதி நிகழ்ந்தது. அங்கு பாதிக்கப்பட்ட நபரான ஜெயகணேசனும், ஃபோட்டோ ஸ்டூடியோ தான் வைத்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் மூலம், ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர்களை குறி வைத்தே, இந்த ஹேக்கர் கும்பல் செயல்படுவது தெரிய வருகிறது. இந்த ஹேக்கர்கள் யார்? இந்தக் கும்பல் எங்கிருந்து செயல்படுகிறது? என்பது குறித்து காவல்துறையின்ர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.