ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முதல் தலைமுறையில் பணக்காரர்கள் ஆன 60 பெண்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ உல்லால் மற்றும் நீரஜா சேத்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். இவர்கள் குடும்ப பரம்பரை சொத்துகள் மூலமோ அல்லது குடும்ப தொழில்கள் மூலமோ பணக்காரர்கள் ஆகாமல், சுயமாக சம்பாதித்து பணக்காரர்கள் ஆனவர்கள் ஆவர்.
தொலைக்காட்சி நட்சத்திரமும், தொழில்முனைவோரும் ஆன 21-வயது கெய்ல் ஜென்னர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் மிகவும் வயது குறைந்தவர் ஆவார். உல்லால் இந்தப் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 130 கோடி டாலர் ஆகும்.
21-வது இடம்பிடித்துள்ள சேத்தியின் சொத்து மதிப்பு 100 கோடி டாலர் ஆகும்.
கணினி நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்ஸின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், அதிபராகவும் 2008-ம் ஆண்டு முதல் இருந்துவரும் 57 உயதான உல்லால், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் ஆவர். 2017-ம் ஆண்டில் இந்த நிறுவனம் 160 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அரிஸ்டா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை உல்லால் வைத்துள்ளார்.
63 வயதான சேத்தி, சின்டெல் மென்பொருள் நிறுவனத்தின் துணை அதிபர் ஆவார். 1980-ம் ஆண்டு தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து இவர் சின்டெல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2,000 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் , முதல் வருட விற்பனையில் 30,000 டாலரை ஈட்டியது. 2017-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 92.4 கோடி டாலர் ஆகும். 23,000 ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் 80 சதவீத ஊழியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 60 பெண்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 7,100 கோடி டாலராகும். இது 2017-ம் ஆண்டைவிட 17 சதவீதம் அதிகமாகும். இந்தப் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான குறைந்தபட்ச சொத்து மதிப்பின் அளவு 23 சதவீதம் உயர்ந்து 32 கோடி டாலராக உள்ளது.
இந்தப் பட்டியலில் 24 பேரின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் அதிகமாகும். கடந்த ஆண்டு இது 18-ஆக இருந்தது. 7 புதுமுகங்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதிகபட்சமாக கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 27 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
பேஷன் மற்றும் சில்லறை வர்த்தகத் துறையைச் சேர்ந்த 17 பேரும், தொழில்நுட்பத் துறை யைச் சேர்ந்த 13 பேரும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை சேர்ந்த 10 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள 60 பெண்களில் 14 பேர் அமெரிக்காவுக்கு வெளியில் பிறந்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.