அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தின் முக்கிய பதவியில் சென்னை பெண் கல்விக் கடன் பெற்று படித்தவர்

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சி.எப்.ஓ.) திவ்யா சூர்யதேவரா என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

இவர் செப்டம்பர் மாதம் தனது புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

சர்வதேச அளவில் மிகப் பெரிய பொறுப்புக்கு வந்திருக்கும் திவ்யா சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர்.

சென்னையில் படிப்பை முடித்ததும் கல்விக்கடன் பெற்று அமெரிக்கா சென்று அங்குள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். அங்கேயே பட்டய கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்ற திவ்யா சில நிறுவனங்களில் பணியாற்றிய பின், கடந்த 2005-ம் ஆண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.

அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றிய திவ்யா, தனது திறமையாலும், கடும் உழைப்பாலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிதித்துறையின் துணை அதிகாரி பதவிக்கு வந்தார். இப்போது பதவி உயர்வு பெற்று தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திவ்யாவின் திறமையை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா வெகுவாக பாராட்டி உள்ளார்.

திவ்யாவின் அனுபவம் தங்கள் நிறுவனத்தின் நிதித்துறையிலும், தொழில் வளர்ச்சியிலும் மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டு வந்து இருப்பதாகவும், அவர் நிதித்துறையின் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

1 comment

Leave a comment

Your email address will not be published.