அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 9 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுவிட்டால் அவர் உயிரிழக்கும் வரை பதவியில் நீடிப்பார். சில நீதிபதிகள் மட்டும் தாமாக முன்வந்து ஓய்வெடுப்பதாக அறிவிப்பது உண்டு. அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அந்தோனி கென்னடி (81) வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறப்போவ தாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியை தேர்வு செய்யும் பணியை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதி யாக வேண்டும் என்றால் அவரை அதிபர் பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தின் செனட் அவை உறுதி செய்ய வேண்டும்.

இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக 25 நீதி பதிகள் அடங்கிய பட்டியலை அதிபர் ட்ரம்ப் தயார் செய்துள்ளார். இதில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது 6-வது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 25 நீதி பதிகள் கொண்ட பட்டியலில் இருந்து 3 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒருவர் செனட் அவையின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஸ்காலியா கடந்த 2016-ல் மரணமடைந்தார். அந்த பதவிக்கு அப்போதைய அதிபர் ஒபாமா, 3 நீதிபதிகளைப் பரிந்துரை செய்தார். இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒபாமா தனது ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்ததால் அவர் பரிந்துரையை செனட் அவை பரிசீலிக்கவில்லை. கடந்த 2017-ல் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, நீல் கார்சச் என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.