வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப்படை என்ற புதிய படையை உருவாக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, கப்பற்படை, கடலோர பாதுகாப்பு என 5 பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில் 6வது படைப் பிரிவாக விண்வெளிப்படை உருவாக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமாக பென்டகனுக்கு இதுதொடர்பான உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய விண்வெளி கவுன்சில் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:
அமெரிக்கா வெறுமனே விண்வெளியில் இருப்பை கொண்டிருப்பது போதுமானதாக இருக்காது. நாம் கண்டிப்பாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஒட்டுமொத்த உலகமே அமெரிக்காவை உற்றுப்பார்த்து வருகிறது. நமது மதிப்பை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்த வேண்டும். அதனால் விண்வெளிப்படை என்று தனியாக ஒரு படையை உருவாக்க பென்டகனுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உடனடியாக அமைத்து நமது நாட்டின் 6வது படையாக விரிவுபடுத்த வேண்டும். இதுதான் இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். விண்வெளி போக்குவரத்து மேலாண்மையை கண்காணிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.
அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப்படை : அதிபர் டிரம்ப் உத்தரவு
