அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் ராஜினாமா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரியான கெல்லி சாட்லர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அலுவலகம் செயல்பட்டு வரும் வெள்ளை மாளிகை யில் தொலைதொடர்பு அதிகாரியாக கெல்லி சாட்லர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மேலவை உறுப்பினர் (செனட்) ஜான் மெக்கெயின் பற்றி கெல்லி சாட்லர் கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது. நாட்டுக்காக பணியாற்றி தற்போது சிகிச்சையில் இருக்கும் ஒரு அதிகாரியை, வெள்ளை மாளிகை அதிகாரி கிண்டல் செய்த சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கெல்லி சாட்லர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா கூறும்போது, “அதிபரின் செயல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த கெல்லி சாட்லர் தற்போது அந்தப் பணியில் இல்லை. ஜான் மெக்கெயினின் சேவையை நாடு மதிக்கிறது” என்று கூறினார்.

இந்த நிலையில் கெல்லி சாட்லரை அந்த பணியிலிருந்து வேறு பதவிக்கு மாற்றுவதற்கான முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு வந்ததாக வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெள்ளை மாளிகையை விட்டு வேறு துறை அல்லது வேறு ஏஜென்சிக்கு கெல்லி சாட்லரை மாற்றுவதற்கான முயற்சிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தன என்று சிஎன்என் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜான் மெக்கெயின் குறித்து கெல்லி கருத்து தெரிவித்தாரா இல்லையா என்பதை வெள்ளை மாளிகை நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம், ஜான் மெக்கெயினின் மகள் மேகன் மெக்கெயினை தொலைபேசியில் அழைத்து கெல்லி சாட்லர் மன்னிப்பு கேட்க முயன்றதாக ஹில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கெல்லி ஏன் இன்னும் வெள்ளை மாளிகை பணியில் தொடர்கிறார் என்று மேகன் மெக்கெயின் வெளிப்படையாக கேள்வியை எழுப்பினார். இந்த நிலையில்தான் கெல்லி சாட்லர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.