விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக இரு டி 20 ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது.
இதன் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை டப்ளின் நகருக்கு இந்திய அணி சென்றடைந்தது. அங்குள்ள மெர்ச்சன்ட்ஸ் டெய்லர் பள்ளி மைதானத்தில் இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கேப்டன் கேரி வில்சன் தலைமையில் அயர்லாந்து அணி இந்திய வீரர்களுக்குச் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஆல்ரவுண்டர் கெவின் ஓ’பிரைன் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களான உள்ளனர். 31 வயதான இந்திய வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளரான சிம்ரன்ஜித் சிங் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
2007-ம் ஆண்டுக்குப் பிறகு அயர்லாந்தில் இந்தியா விளையாடவுள்ளது. 2007-ல் பெல்பாஸ்ட் நகரில் ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் இந்தியா விளையாடியது. இதுவரை இந்தியாவும், அயர்லாந்தும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இதில் 3 ஒரு நாள் போட்டிகளும், ஒரேயொரு டி20 போட்டியும் அடக்கம். அதில் அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது.
நேரம்: இரவு 8.30
நேரடி ஒளிபரப்பு:
சோனி சிக்ஸ்.