அரசு கொள்கை முடிவெடுத்து உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்ட பிறகே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வைகோ தாக்கல் செய்த பொதுநலன் மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலர் வைகோ கடந்த ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். ‘ஸ்டெர்லைட் நிறுவனம் ஆண்டுக்கு 8 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. இதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தலைமைச் செயலர், உள்துறை செயலர், ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அரசாணை, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உதவாது. எனவே ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை அரசு வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில், ‘‘அரசு கொள்கை முடிவெடுத்து, உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்ட பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையிலேயே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆலையில் தற்போது ஏற்பட்டுள்ள கந்தக அமில கசிவு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐஐடி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய 7 பேர் குழுவை அரசு அமைத்துள்ளது’’ என்றார்.
இதை பதிவு செய்து கொண்டு வைகோ தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்தும், பிற மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.